வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
கொடியேற்ற நிகழ்விற்காக இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

Published : August 30, 2026 at 5:55 PM IST
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழா நேற்று (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பேராலயத்தில் இருந்து அன்னையின் சொரூபம் தாங்கிய கொடியினை நேற்று மாலை 5.45 மணிக்கு பக்தர்கள் கடைவீதி, கடற்கரை சாலை, ஆரிய நாட்டுத் தெரு வழியாக பேராலயத்தின் முகப்பிற்கு கொண்டு வந்தனர். தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியினை புனிதம் செய்து சிறப்பு பிராத்தனை செய்து கொடி ஏற்றினார். அப்போது, பேராலயத்தில் அலங்கார மின்விளக்குகள் ஏற்றப்பட்டு ஜொலித்தது. பின்னர் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து, செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் தினந்தோறும் சிறிய தேர் பவனியும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செப்டம்பர் 7-ஆம் தேதி பெரிய தேர் பவனியும் நடைபெறுகிறது. இந்த கொடியேற்ற நிகழ்விற்காக, இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

