ETV Bharat / state

நேபாள பேரிடரில் சிக்கி மீட்கப்பட்ட மேலும் 5 பேர் சென்னை வந்தடைந்தனர்

"நாங்கள் கடுமையான மன உளைச்சலில் இருந்தோம். இந்திய அரசு, இந்திய தூதரக அதிகாரிகள், எங்களை தொடர்பு கொண்ட பிறகுதான் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது" என்று சென்னை திரும்பியவர்கள் கூறினர்.

சென்னை திரும்பியவர்களை வரவேற்ற அமைச்சர் சரத்குமார்
சென்னை திரும்பியவர்களை வரவேற்ற அமைச்சர் சரத்குமார் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 1, 2026 at 11:11 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: நேபாளத்திற்கு யாத்திரை சென்று, பேடரில் சிக்கி, மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மேலும் 5 பேர், டெல்லி வழியாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு மற்றும் இயற்கை பேரிடரில், புனித யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகளை நேபாள ராணுவம், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய அரசு ஆகியவை இணைந்து தீவிரமாக மேற்கொண்டன.

இந்நிலையில் நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட 21 பேர் கடந்த 27-ஆம் தேதி நள்ளிரவு டெல்லி வழியாக சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இரண்டாம் கட்டமாக, கோவை இன்று 28 பேர் கோவை வந்தடைந்தனர்.

இந்நிலையில், நேபாளத்தில் மீட்கப்பட்ட 5 பேர், இன்றிரவு டெல்லி வழியாக விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 2 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மூன்று பேர் மதுரையை சேர்ந்தவர்கள். 5 பேரையும் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் சரத்குமார் வரவேற்றார்.

அவர்களில் சென்னையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் கூறுகையில், "நேபாளத்தில் விபத்து ஏற்பட்டபோது, நாங்கள் கைலாய மலையில் இருந்தோம். நாங்கள் சீன எல்லையில் இருந்ததால், விபத்தின் தாக்கம் குறித்து முதலில் தெரியவில்லை. வெளியே வந்த பிறகுதான் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க.. தூத்துக்குடியில் அமையும் சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலையம் - உள்ளூர் மக்கள் எதிர்ப்பது ஏன்?

நாங்கள் உடல் அளவிலும், மனதளவிலும் கடுமையான பாதிப்புகளை சந்தித்தோம். தொடர்ந்து அங்கு இருப்பதற்கும் சீன அரசு தரப்பில் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. கடுமையான மன உளைச்சலில் இருந்தோம். இந்திய அரசு, இந்திய தூதரக அதிகாரிகள், எங்களை தொடர்பு கொண்ட பிறகுதான் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது" என்று கூறினார்.

மதுரையைச் சேர்ந்த ராமசாமி என்பவர் கூறுகையில், "நாங்கள் மதுரையில் இருந்து நேபாளம் சென்றோம். எங்களை மீட்பதற்கு இந்திய அரசு சிறப்பாக செயல்பட்டது. அங்கு நிலவும் சூழ்நிலைகள் எதுவும் எங்களுக்கு முழுமையாக தெரியவில்லை. இங்கு வந்த பிறகுதான் பல விஷயங்களை தெரிந்து கொண்டோம். நாங்கள் இருந்த இடத்தில் பெரிய அளவில் பிரச்சனை இல்லை. ஆனால் திரும்பி வரும் பாதையில் அனைத்து கடைகள் மற்ற நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன" என்றார்.

சென்னை கந்தன்சாவடியை சேர்ந்த சாய் கீதா கூறுகையில், "சென்னைக்கு வந்த பின்பு தைரியமாக பேசுகிறோம். ஆனால் அதுவரை பேசுவதற்கே தைரியம் இல்லை. எங்களுக்கு முன்பாக சென்றவர்களும் யாரும் இல்லை. எங்களுக்கு பின்னால் வந்தவர்களும் யாரும் இல்லை. தெய்வத்தின் அருளால் நாங்கள் உயிர் பிழைத்து வந்துள்ளோம். மிகுந்த அச்சத்தில் இருந்தோம். இந்திய அரசு, தூதரக அதிகாரிகள் தரப்பில் இருந்து அழைப்பு வந்த பிறகுதான், எங்களுக்கு மிகப்பெரிய ஆறுதல் கிடைத்தது" என்று தெரிவித்தார்.