ETV Bharat / state

வேலூர் அருகே மலைப்பகுதியில் பற்றிய தீ: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தீ விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தீ விபத்து நடைபெற்ற மலைப்பகுதி
தீ விபத்து நடைபெற்ற மலைப்பகுதி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 27, 2026 at 10:19 PM IST

1 Min Read
Choose ETV Bharat

வேலூர்: செங்காநத்தம் மலைப்பகுதியில் மர்ம நபர்கள் செயற்கையாக தீவிபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பாரதியார் நகர் செங்காநத்தம் செல்லும் மலைப்பகுதியில் அதிகளவில் செடிகள், மரங்கள் மற்றும் கோரை புல் வளர்ந்து காணப்படுகிறது. தற்போது கோடை வெயில் கடுமையாக இருப்பதால், மலைப்பகுதிகளில் உள்ள கோரை புல் முற்றிலும் காய்ந்த நிலையில் இருந்து வந்துள்ளது. இந்த சூழ்நிலையில், சில மர்ம நபர்கள் கோரை புல்லுக்கு தீ வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

தீ வேகமாக காற்றில் பரவி மலைப்பகுதி முழுவதும் எரியத் தொடங்கியது. இதனால் அருகில் வசிக்கும் குடும்பத்தினர் அச்சத்தில் ஆழ்ந்தனர். தீ பரவியதால் காட்டு வளமும், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மயில், பாம்பு, குருவிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் தீயில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளின் இயற்கை வாழ்விடமும் சேதமடைந்துள்ளது என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பாரதியார் நகர் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதுடன், தீ வைத்த மர்ம நபர்களை தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தீ வைத்தவர்களை கண்டறிந்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், கோடை காலங்களில் மலைப்பகுதிகளில் தீ பரவாமல் தடுக்க கண்காணிப்பு ரோந்து அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதே போன்று சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.