தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து - பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்
இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கன்வேயர் பெல்ட் மற்றும் நிலக்கரி அரைக்கும் பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Published : March 3, 2026 at 4:13 PM IST
தூத்துக்குடி: அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஐந்து அலகுகள் மூலம், சுமார் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடந்த ஆண்டு ஒன்று மற்றும் இரண்டாவது அலகில் தீ விபத்து ஏற்பட்டு, முற்றிலும் சேதமானது. தொடர்ந்து, அங்கு தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மின் உற்பத்தி துவங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் மூன்று, நான்கு, ஐந்து அலகுகள் மூலம் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று (மார்ச் 03) அதிகாலை 4 மணியளவில், தூத்துக்குடி துறைமுக பகுதியில் இருந்து அனல் மின் நிலையத்திற்கு கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி கொண்டு வரக்கூடிய நிலக்கரி கையாளும் பகுதி-2-இல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தானது அதன் அருகே உள்ள செகண்டரி கிரஷர் எனப்படும் நிலக்கரி அரைக்கும் பகுதி- 2-க்கும் தீ மளமளவென வேகமாக பரவியது.
இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள தீயணைப்புத்துறையினர் மற்றும் தூத்துக்குடி மாநகரப் பகுதி தீயணைப்புத்துறையினர் ஆகியோர் நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் சென்று சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கன்வேயர் பெல்ட் மற்றும் நிலக்கரி அரைக்கும் பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து குறித்து தெர்மல் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தீ விபத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து அதிகாரிகள் கணக்கீடு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் இந்த தீ விபத்து காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படவில்லை, வேறு கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

