கடனை வசூலிக்க சென்ற நிதி நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை - ராமநாதபுரத்தில் நடந்த கொடூரம்
பிரேம்குமாரின் உடலைக் கடற்கரையோர காட்டுப்பகுதியில் குழி தோண்டி புதைத்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை எடுத்துச் சென்று ராமநாதபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அடகு வைத்ததாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Published : October 10, 2026 at 9:24 PM IST
ராமநாதபுரம்: நிதி நிறுவனர் ஊழியர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதைத்த கொடூர சம்பவம் ராமநாதபுரத்தில் அரங்கேறியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், வாலாந்தரவை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் பிரபல தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் வசூல் பிரிவில் மேலாளராகப் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உச்சிப்புளி அருகே உள்ள துத்திவலசை கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர், பிரேம்குமார் பணிபுரியும் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்ததாகவும், அதற்கான மாத தவணையை அவர் சரிவர செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
ஆகையால், அவரிடம் பணத்தை வசூல் செய்யும் பொருட்டு பிரேம்குமார், காளிதாஸ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, பணம் இப்போது கையில் இல்லை, நாளை தருகிறேன் கூறி பிரேம்குமாரை காளிதாஸ் தொடர்ச்சியாக அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறும் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி பிரேம்குமாரை செல்போனில் அழைத்த காளிதாஸ், பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி, அவரை துத்திவலசை கிராமத்திற்கு வரவழைத்துள்ளார். காளிதாஸ் பணம் கொடுக்கத்தான் அழைக்கிறார் என நம்பி அவர் சென்றுள்ளார்.
அங்கு வந்த பிரேம்குமாரை மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு காளிதாஸ் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் பிரேம்குமாரின் உடலைக் கடற்கரையோர காட்டுப்பகுதியில் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை எடுத்துச் சென்று ராமநாதபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அடகு வைத்ததாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே பிரேம்குமாரைக் காணவில்லை என அவரது உறவினர்கள் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பிரேம்குமாரின் செல்போன் அழைப்புகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில் பிரேம்குமார் கடைசியாக துத்திவலசை கிராமத்திற்குச் சென்றதும், அவரை கடைசியாக காளிதாஸ் தொடர்பு கொண்டதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதன் அடிப்படையில் காளிதாஸை பிடித்து, அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதை அடுத்து, பிரேம்குமார் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். பின்னர், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் இன்று (அக்டோபர் 10) காலை உடல் தோண்டி எடுக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே உடற்கூராய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த உறவினர்கள், உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். உறவினர்களின் கோரிக்கையை ஏற்று பிரேம்குமாரின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே பிரேம்குமாரின் உறவினர்கள் மற்றும் வாலாந்தரவை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ராமேஸ்வரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பிரேம்குமாரின் கொலைக்கு நியாயம் கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அத்துடன், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் செய்தனர்.
இதையடுத்து தேவிபட்டினம் மற்றும் ராமநாதபுரம் நகர் காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, ராமநாதபுரம் வட்டாட்சியர் பழனிகுமார், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகையால், மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதியில் உள்ள தனியார் மகாலில் தங்க வைத்தனர்.
சாலை மறியல் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் ராமநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

