ETV Bharat / state

இறுதி வாக்காளர் பட்டியல்; தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் படி அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் 5.36 லட்சம் வாக்களார்கள் உள்ளனர்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 23, 2026 at 4:25 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழகத்தில் இன்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் 5.67 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன் தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், நவம்பரில் நடைபெற்ற எஸ்ஐஆர் பணிக்கு பிறகு அந்த எண்ணிக்கை 5.43 கோடியாக குறைந்தது. குறிப்பாக, சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன.

இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19 ஆம் தேதி முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாக்களார் பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்ய 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 பேரும் என 24.47 லட்சம் பேர் விண்ணப்பம் வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டார். அதன்படி, SIR பணிகளுக்கு பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. அதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2,77,38,925 ஆகவும், பெண் வாக்காளர் எண்ணிக்கை 2,89,60,838 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர் 7,617 பேரும் உள்ளனர்.

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் 5.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தின் துறைமுகம் தொகுதியில் 1.16 லட்சம் பேர் வாக்காளர்கள் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் வலைத்தளமான https://elections.tn.gov.in பக்கத்தில் பார்க்கலாம் எனவும், 1.1.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள் தங்களின் பெயரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இணைக்கலாம் எனவும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

மேலும், 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறையாக வாக்காளர்களாக பதிவு செய்தவர்களுக்கும், திருத்தங்களுக்கு விண்ணப்பித்த வாக்காளர்களுக்கும், அவர்களின் பதிவு செய்யப்பட்ட குடியிருப்பு முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் வாக்காளர் அடையாள அட்டை (EPIC) வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் மாவட்ட தொடர்பு மையங்களை "1950" என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 1800-4252-1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிலும் தகவல்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.