நெல்லை: தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்; பெண் விஏஓ கைது
மூக்காண்டி ரூ.10,000 லஞ்ச பணத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கிராம நிர்வாக அலுவலர் இதயக்கனியையும், இடைத்தரகர் வெங்கடேசனை கையும் களவுமாக பிடித்தனர்

Published : June 3, 2026 at 11:03 PM IST
நெல்லை: நெல்லை சேரன்மகாதேவியில் தனியார் நிதி நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவதற்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பெண் கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இடைத்தரகர் மூலம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சப் பணத்தை பெற்றபோது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
| இதையும் படிங்க.. கிண்டி மெட்ரோ, ரயில், பேருந்து நிலையங்களை இணைக்கத் திட்டம் |
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியை சேர்ந்த மூக்காண்டி என்பவர், தனியார் நிதி நிறுவனம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார் . இதற்காக லைசன்ஸ் கேட்டு சேரன்மகாதேவி கிராம நிர்வாக அலுவலர் இதயக்கனியிடம் மூக்காண்டி விண்ணப்பித்திருந்தார்.
அப்போது, மூக்காண்டியிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால் மட்டுமே லைசென்ஸ் தர முடியும் என கிராம நிர்வாக அலுவலர் இதயக்கனி கூறியதாக தெரிகிறது. லஞ்ச பணத்தை பெற்றுக் கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் இதயக்கனியிடம் வெங்கடேசன் என்பவர் இடைத்தரகராக வேலை பார்த்ததாக கூறப்படுகிறது.
ஆனால், லஞ்சம் கொடுக்க மனமில்லாத மூக்காண்டி, இதுகுறித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு மூக்காண்டி, இடைத்தரகர் வெங்கடேசனுடன் கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்றார்.
அங்கு இதயக்கனியிடம் மூக்காண்டி பத்தாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த காவல் ஆய்வாளர் ராபின் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், கிராம நிர்வாக அலுவலர் இதயக்கனியையும், இடைத்தரகர் வெங்கடேசனை கையும் களவுமாக கைது செய்தனர். இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
| இதையும் படிங்க.. இருசக்கர வாகனத்தை பழுது பார்க்க கால தாமதம்; ஆட்டோ ஏஜென்சி நிறுவனம் ரூ.60,000 நஷ்டஈடு வழங்க உத்தரவு |
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட இதயக்கனி, மேலப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் இதயக்கனி, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். லஞ்சம் பெற்ற புகாரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் கைதான சம்பவம், சேரன்மகாதேவியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

