ETV Bharat / state

கசம் நீர்நிலை கால்வாயை தூர்த்து எரிமேடை அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு

இந்த நீர்நிலை கால்வாயை நம்பி நூற்றுக்கணக்கான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தினால் 300 ஏக்கர் நிலத்தின் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கனக சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி
கனக சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 2, 2026 at 11:07 PM IST

1 Min Read
Choose ETV Bharat

வேலூர்: கசம் நீர்நிலை கால்வாயை தூர்த்து எரிமேடை அமைப்பதற்கு கனக சமுத்திரம் கிராம விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா மற்றும் லத்தேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கனக சமுத்திரம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள விவசாயிகளின் பிரதான பயிராக கரும்பு, நெல், கீரை போன்றவை உள்ளன. மேலும், இந்த கிராம விவசாயிகள் அப்பகுதியில் உள்ள ஏரி, ஓடை, கால்வாய் மற்றும் கசம் கால்வாயில் இருந்து கிடைக்கும் தண்ணீரையே நம்பியே உள்ளனர்.

இந்த மாதிரியான சூழலில், இந்திரா நகரைச் சேர்ந்த மேலாதிக்க சமூகத்தினர் சுடுகாடு அமைப்பதாகக் கூறி இந்த நீர் நிலைகள் வரும் வழித் தடத்தை அடைக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக கனக சமுத்திரம் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக, கசம் கால்வாயை அடைத்து இந்திரா நகர் பகுதி வாசிகள் சுடுகாட்டிற்கான எரிமேடை மற்றும் சுற்றுச்சுவர் கட்டி வருவதாகவும், இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

ஆகையால், கனக சமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயிகள் சுடுகாடு எரிமேடை அமைப்பதற்கு தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், எரிமேடை மற்றும் சுற்றுச்சுவர் அமைப்பது என்றால், கசம் கால்வாய்க்கு மாற்று வழி செய்துவிட்டு பின்னர் அந்த பணிகளைத் தொடரவும் அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: விடைத்தாள் ஆன்லைன் மதிப்பீட்டில் குளறுபடி; சிபிஎஸ்இ தலைவர், செயலாளர் மாற்றம்

ஆனால், இதற்கு அதிகாரிகள் செவி சாய்க்காமல் அங்கிருந்து புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த கனக சமுத்திரத்தைச் சேர்ந்த மக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர், கே.வி.குப்பம் வட்டாட்சியர் ஆகியோரிடம் ஏரி, நீர்நிலை மற்றும் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என சட்ட விதிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, உடனடியாக எரிமேடை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை தடுக்கும்படி மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், "இந்த நீர்நிலை கால்வாயை நம்பி நூற்றுக்கணக்கான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தினால் 300 ஏக்கர் நிலத்தின் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். ஆகையால், மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, விவசாயிகள் நலனை காக்க நடவடிக்கை எடுக்கு வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.