'பாலாற்றை பாழாக்காதே' - மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை கண்டித்து திருப்பத்தூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அல்ல, மாசு உற்பத்தி வாரியம் என பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் வடிவேல் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Published : July 6, 2026 at 3:18 PM IST
திருப்பத்தூர்: வாணியம்பாடியில் உள்ள நீர்நிலைகளில் ரசாயன நுரை பொங்கி வருவதால், பாலாற்றை பாதுகாக்கத் தவறிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தோல் பதனிடும் மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் பாலாற்றில் கலந்து விடுவதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் நேரடியாக பாலாற்றில் விடப்படுவதால் பாலாற்று படுக்கையில் உள்ள நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் எதிரொலியாக, வாணியம்பாடியை சுற்றியுள்ள விவசாயக் கிணற்றில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சியபோது, அந்த நீருடன் சேர்ந்து ரசாயன நுரை பொங்கி வழிவதாகவும், பாலாற்றில் அதிகளவு குப்பைகளை கொட்டுவதால், நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்து, அந்த நீரை கால்நடைகள் கூட குடிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், பாலாற்றில் தொடர்ந்து தோல் தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுவதை கண்டித்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இன்று (ஜூலை 6) வாணியம்பாடியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பாக பாலாற்றுப் படுக்கை விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பேசிய பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தை சேர்ந்த வடிவேல் சுப்பிரமணியன், “பாலாறு கிட்டத்தட்ட 50 கிமீ-க்கும் மேல் மாசடைந்து கிடக்கிறது. அதற்கு முக்கிய காரணம் ஊராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளிட்ட நிர்வாகங்கள் அனைத்தும் திடக்கழிவுகளை நேரடியாக பாலாற்றில் கொட்டுவதுதான்.
இதேபோல, தோல் தொழிற்சாலை கழிவுகளும் நேரடியாக பாலாற்றில் கலக்கப்படுகின்றன. இதனால், வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. விவசாயத்திற்கு தகுதியே இல்லாத நிலமாக மாறிவிட்டது. பாலாற்றுப் படுகை மாசடைந்ததால் முப்போகம் விளைந்த இடத்தில் விவசாயம் பொய்த்துவிட்டது.
தற்போது தென்னை விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம். நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதால் தென்னை விவசாயமும் அழிவின் விளிம்பில் உள்ளது. இதனால், வெளியூருக்குக் கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அவர்களுக்கு உறுதுணையாக உள்ளது. இது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அல்ல, மாசு உற்பத்தி வாரியம்” என ஆதங்கத்தை கொட்டினார்.
பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திருப்பத்தூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் மனு அளித்துள்ளதாகவும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாலாற்றை பாழாக்கிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினர்.

