தவெக ஆட்சியால் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் இல்லை - கே. பாலகிருஷ்ணன் விமர்சனம்
பெரு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வாரி வழங்குகிறது என கே. பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published : August 28, 2026 at 5:08 PM IST
சென்னை: தவெக ஆட்சியால் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை பல்லாவரம் ரயில்வே சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “மத்தியில் இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்களும், தற்போதுள்ள ஆட்சியில் உள்ள பிரதமர் மோடி அரசும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கு பதிலாக அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் குடும்பங்களின் சொத்துகளை வளப்படுத்துவதிலேயே தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பிரதமர் மோடி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.18 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
ஏழை மக்களுக்கு எந்தவித சலுகையும் இல்லை என்று கூறும் மோடி அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி வழங்கி வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், இளைஞர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல், தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியாளர்களை மாற்றி மாற்றி மக்கள் வாக்களித்து வந்த நிலையில், இந்த முறை தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியில் அமர்த்த மக்கள் வாக்களித்தனர். ஆனால் புதிய ஆட்சியில் பெரிய அளவில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதே தனியார்மயம், அதே ஒப்பந்த முறை தான் தொடர்கிறது.
அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இலவச திட்டங்களை அறிவிப்பதன் மூலம் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று ஆட்சியாளர்கள் நினைக்கக் கூடாது. குடிநீர் விநியோகம், குப்பை அள்ளும் பணி, போக்குவரத்து, மின்சாரம் என அனைத்துத் துறைகளிலும் தனியார்மயம் புகுத்தப்பட்டு வருகிறது.
அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சட்டப் பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் சூழலில், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். ஆனால் மக்கள் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க வேண்டிய சட்டப்பேரவை தனிப்பட்ட விரோதங்களை பேசும் மன்றமாக மாறியிருப்பது வேதனை அளிக்கிறது.
| இதையும் படிங்க: நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற 49 தமிழர்கள்: மகன் தலைமையில் அனுப்பி வைத்த ஏஜென்சி உரிமையாளர் கண்ணீர் |
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதே தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். எனவே வெளியுறவுத் துறை மூலம் உடனடியாக தகவல்களைச் சேகரித்து காணாமல் போனவர்களின் நிலை குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு துல்லியமான தகவல்களை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

