FACT CHECK: தமிழ்நாட்டில் இந்தி மொழியை தடை செய்யும் மசோதா தாக்கலாகிறதா? வெளியான விளக்கம்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்தி மொழி தடை மசோதாவுக்கான முன்மொழிவு எதுவும் பெறப்படவில்லை என்று சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Published : October 15, 2025 at 10:31 PM IST
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கலாக போவதாக பரவிய தகவல் வதந்தி என்று தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் கரூர் துயர சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்றைய தினம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றதாகவும், திமுக சார்பில் வழக்கறிஞர்கள் வில்சன் ஆகியோர் இதில் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
மேலும், இந்த மசோதாவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இந்தி மொழியில் இருக்கக்கூடிய விளம்பர பதாகைகள், அரசு அலுவலகங்களில் உள்ள இந்தி பெயர்கள் மற்றும் இந்தி பெயரில் உள்ள முகவரிகள் ஆகியவை நீக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. மேலும், தேர்தல் வருவதையொட்டி திமுக இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் பேச்சுகள் அடிபட்டன.
இந்த தகவலை அடுத்து, தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை ஆபத்தானது என்றும், மொழியை அரசியல் கருவியாக பயன்படுத்தக் கூடாது எனவும் பாஜகவினர் சார்பில் விமர்சனங்கள் எழுந்தன. இது பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு எதிரான சட்ட மசோதா எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில், இந்தி மொழி தடை மசோதா தொடர்பாக வெளியான தகவலுக்கு மக்கள் தொடர்பு துறையின் 'தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பகம்' தரப்பில் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், ''தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாக பரவும் தகவல் வதந்தி ஆகும். தமிழ்நாட்டில் அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை, சட்டப்பேரவையில் முதலமைச்சர் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் தகவல் முற்றிலும் வதந்தியே'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என்று சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

