ராமேஸ்வரம் கடல் காற்றில் இருந்து மின்சாரமா? ஆய்வாளர்களின் அற்புத கண்டுபிடிப்பு!
மனிதர்களை ஆழ்கடலுக்குள் அனுப்பி சோதனை செய்வதன் 2-ம் கட்டமாக 2026 ஆம் ஆண்டில் ’மட்ஸ்யா 6000’ எந்திரத்தை 500 மீட்டர் கடல் ஆழத்துக்கு அனுப்ப உள்ளதாக பாலாஜி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Published : October 17, 2025 at 7:39 PM IST
- BY எஸ். ரவிச்சந்திரன்
சென்னை: ராமேஸ்வரம் கடல் காற்றில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான ஆய்வு பணிகள் ஓராண்டிற்குள் நிறைவடையும் என தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
‘நீலப் பொருளாதாரம்’ என்ற பெயரில் புவி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாடு (Geoscience Technology and Innovation Conference) இன்று தேசிய கடல் பெருங்கடல் தொழில்நுட்பக் கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பொருளாதார வளர்ச்சி, வாழ்வாதார மேம்பாடு, கடல் சார்ந்த சுகாதாரம் ஆகியவற்றுக்கு கடல் வளங்கள் பயனுள்ளதாக இருப்பது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை முன் வைத்தனர்.
அந்த கருத்தரங்கில் பேசிய தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன், “நீடிக்கவல்ல எதிர்காலத்திற்கு ’நீலப் பொருளாதாரம்’ மிக முக்கியமானது. ’ஆழ்கடல் இயக்கம்’ போன்ற முயற்சிகளால் கடல்சார் ஆராய்ச்சியை இந்தியா உலகளவில் எடுத்து செல்கிறது” என்றார்.
தொடர்ந்து அவர் ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், “ கடல் மனிதர்களுக்கு மட்டும் இல்லாமல் மீன் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களுக்கும் வாழ்வாதாரமாக உள்ளது. ஆகையால் கடல்சார் பொருளாதாரம் மற்றும் நிலைத்ததன்மை சேர்ந்து இருப்பது தான் நீலப் பொருளாதாரம். அதன் அடிப்படை எந்த தொழில்நுட்பத்தை கொண்டு வந்தாலும் அனைத்து கடல் உயிரினங்களுக்கும் உகந்த சுற்றுசூழலை அமைப்பதாக இருக்க வேண்டும். ’நீலப்பொருளாதாரத்தில்’ 13 அமைச்சகம் சேர்ந்துள்ளன. புவி அறிவியியல் துறை முன்னின்று வழிநடத்தி வருகிறது.
கடற்பாசிகளை வளர்க்கலாம்
கடற்பாசிகளை உணவிற்கும் பயோ எத்தனலாகவும் பயன்படுத்தலாம். அதே கடற்பாசிகளை எளிமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடலில் பயிரிட்டு வளர்ப்பதற்கும் சுய உதவி குழுக்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளித்துள்ளோம். ஆழ்கடலில் உள்ள கனிமவளங்களை எடுப்பதால், அங்குள்ள சுற்றுசூழல் பாதிக்கப்படும். மீண்டும் பழைய நிலைக்கு மாறுவதற்கு அதிக காலங்கள் ஆகும்.
சிறிய அளவு கனிமவளங்கள் எடுப்பு
கடலில் உள்ள கனிமவளங்களை பாதிப்பு இல்லாமல் எடுப்பதற்கு தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து வருகிறோம். கனிமவளங்களை கண்டுபிடிபதற்கு சென்சார் மூலமாகவும், ஆளில்லா வாகனத்தை அனுப்பி ஆய்வு செய்து வருகிறோம். அதன் மூலம் கனிமவளத்தின் அளவினை தெரிந்துப் பின்னர் அதனை எடுப்பதற்கு செல்ல முடியும். தற்போது சிறிய அளவில் தான் சோதனை முயற்சி நடந்து வருகிறது. அதிகளவில் எடுப்பதற்கு சர்வதேச அளவில் அனுமதி இல்லை. 5,000 முதல் 6,000 மீட்டர் ஆழத்தில் சென்று ஆய்வு செய்து வருகிறோம். கடலில் அலை எப்போதும் இருந்துக் கொண்டே இருக்கும். எனவே குழாய் பொருத்தி எடுப்பது சவாலானது. அதனையும் சோதனை செய்து வருகிறோம்” என்றார்.
ஆழ்கடலுக்குள் மனிதரை அனுப்பும் திட்டம்
தொடர்ந்து பேசிய அவர், “ஆழ்கடலில் மனிதர்களை அனுப்பி சோதனை செய்வதை மூன்று கட்டங்களாக செயல்படுத்தி வருகிறோம். அதில் முதல் கட்டமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு ’சமுத்திரயான்’ அனுப்பட்டது. அதில் இருந்து சரியாக தகவல்கள் வருகின்றன. விஞ்ஞானிகளை அனுப்புவற்காக வடிவமைக்கப்பட்ட உருளையையும் ஆய்வு செய்ததில், அதுவும் சரியாக செயல்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டத்தில் ’மட்ஸ்யா 6,000’ இயந்திரத்தை 500 மீட்டர் ஆழத்தில் 2026 ஆம் ஆண்டில் கொண்டு செல்லப் போகிறோம். தொடர்ந்து 2027 ஆம் ஆண்டில் அதனை 6,000 மீட்டர் ஆழத்துக்கு (கடல் மத்திய பகுதி) அனுப்பி விடுவோம்.
கடல் காற்றில் இருந்து மின்சாரம்
கடலில் காற்றின் வேகத்தை தேசிய காற்று நிறுவனத்தின் மூலம் ஆய்வு செய்கிறோம். தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து செயல்படுகிறது. கடலில் ’பிளோட்டிங் பேயிங் ரேடார்’ நிறுவ உள்ளோம். அதன் மூலம் கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் உயரத்தில் ஓராண்டு காற்றின் வேகத்தை கணக்கிட்டு அளவிட உள்ளோம். அதை வைத்து கடல் காற்று மூலம் மின்சார உற்பத்தி செய்யும் டர்பைன்களை நிறுவுவதற்கு தேவையான தரவுகள் கிடைக்கும். சோதனை அடிப்படையில் ராமேஸ்வரம் பகுதியில் அவற்றை நிறுவி ஓராண்டில் கடல் காற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படும்” என தெரிவித்தார்.
கடல் வளங்களும், பொருளாதார மேம்பாடும்
தொடர்ந்து ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்த ஆழ்கடல் இயக்கத்தின் இயக்குநர் ரமணமூர்த்தி, “கடல் சார் வளங்களின் மூலம் நீலப் பொருளதாரத்தை அதிகரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடல் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடல் வாழ் உயிரினங்கள் மூலமாகவும் கடலில் உள்ள பிற வளங்களை பயன்படுத்தியும் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
நிலைத்த மற்றும் நீடித்த வளர்ச்சியின் கீழ் கடல் காற்றில் இருந்தும் மின்சாரம் தயாரிப்பதற்கான பணிகள் கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் அடுத்த ஆண்டில் 500 ஜீகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கான செலவு முதலில் அதிகமாக இருந்தாலும், வரும் காலங்களில் குறையும்” என்றார்.

