ETV Bharat / state

தமிழ்நாடு தேர்தல் களம்: மதுரை திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 25, 2026 at 10:42 PM IST

6 Min Read
Choose ETV Bharat

இரா. சிவக்குமார்

மதுரை: தமிழக அரசியலின் உரைகல்லாகத் திகழும் மதுரை, எப்போதுமே தனித்துவமானது. இந்நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் ஆகியவை குறித்து ஓர் அலசல்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேரங்களிலும், தங்களுக்கான தொகுதி உடன்பாட்டிலும் இறங்கியுள்ளன. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிமுகம் செய்துவிட்டு களத்தில் இறங்கி வேலை செய்யத் தொடங்கிவிட்டது நாம் தமிழர் கட்சி. கோடை வெயில் துவங்கியுள்ள நிலையில், தமிழக தேர்தல் களமும் அனலாய் தகிக்கத் தொடங்கிவிட்டது.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மேலூர் (188), மதுரை கிழக்கு (189), சோழவந்தான் (190), மதுரை வடக்கு (191), மதுரை தெற்கு (192), மதுரை மத்தி (193), மதுரை மேற்கு (194), திருப்பரங்குன்றம் (195), திருமங்கலம் (196), உசிலம்பட்டி (197) 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தற்போதைய வாக்காளர் தீவிர திருத்தத்திற்குப் பிறகு மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 12,08,651 பேர், பெண் வாக்காளர்கள் 12,58,051 பேர், மூன்றாம் பாலினத்தவர் 252 பேர் என மொத்தம் 24,66,954 பேர் உள்ளனர்.

திருமங்கலம் சட்டமன்ற தொகுதி

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, கடந்த 1952ஆம் ஆண்டு முதல் 17 பொதுத்தேர்தல்களும், ஒரு முறை இடைத்தேர்தலும் நடைபெற்றுள்ளன. அதிமுக 7 முறை, காங்கிரஸ் 6 முறை, திமுக 3 முறை, ஃபார்வர்டு பிளாக் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2009ஆம் நடைபெற்ற இடைத்தேர்தலில்தான் திமுக ஃபார்முலா என்று திருமங்கலம் தேர்தல் பேசப்பட்டது. அப்போது திமுக சார்பாக லதா அதியமான் எனும் பெண் வேட்பாளர் வெற்றி பெற்றார். இத்தொகுதியின் 2ஆவது பெண் எம்.எல்.ஏ. இவர் தான்.

அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். பொதுவாகவே இந்தத் தொகுதி அதிமுகவுக்கு சாதகமாக இருந்து வருகிறது. இத்தொகுதியில் வாழும் முக்குலத்தோர், தெலுங்கு சாதியினர், பட்டியல் சமூகத்தவர்தான் தங்களது வெற்றி வேட்பாளர்களைத் தீர்மானிக்கின்றனர். திருமங்கலம் நகராட்சி, பேரையூர் பேரூராட்சி மற்றும் தே.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்டு பல வருவாய் கிராமங்கள் உள்ளன. 3 ஊராட்சி ஓன்றியங்கள், 3 தாலுகாக்கள் உள்ளன.

வாக்காளர்கள் எண்ணிக்கை

தற்போதைய இறுதி வாக்காளர் பட்டியலின் படி, திருமங்கலம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,25,756 பேரும், பெண் வாக்காளர்கள் 1,33,461 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 8 பேரும் என மொத்தம் 2,59,225 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தேர்தலின் போது மொத்த வாக்காளர்கள் 2,79,598. பதிவான வாக்குகள் 2,20,495. வெற்றி பெற்ற அதிமுகவின் ஆர்.பி.உதயகுமார் பெற்றது 1,00,338, 2-வது இடம் பெற்ற திமுகவின் மணிமாறன் 86,251 வாக்குகளைப் பெற்றார்.

மக்கள் எதிர்பார்ப்பு

தேர்தலை முன்னிட்டு திருமங்கலம் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு சார்பில் கள ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, தங்களாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அன்னவயல் காளிமுத்து கூறுகையில், ''இத்தொகுதி 78 விழுக்காடு கிராமங்களையும், கிராம வளங்களையும் சார்ந்ததாகும். இந்த மண்ணில் மல்லி, நெல், சோளம், பருத்தி, கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களும் முக்கியமான விளை பயிர்கள். அதேபோன்ற பல்வேறு மூலிகைகள் விளையக்கூடிய பகுதியாகவும் உள்ளது. ஆகையால் பருத்தி சார்ந்த தொழிலகங்கள், மல்லிகை உற்பத்தி அதிகமாக உள்ள காரணத்தால், வாசனை திரவிய தொழிற்சாலைகள், விவசாய உலர் களங்கள், வேளாண் விளை பொருட்களுக்கான மதிப்புக் கூட்டும் ஆலைகள் மிகவும் அவசியம். திருமங்கலம் நகருக்கு வெளியே பேருந்து நிலையம், கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படுவது அவசியம்'' என்றார்.

உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி

உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரை, கடந்த 1957ஆம் ஆண்டு முதல் 15 பொதுத்தேர்தல்களும், 1971ஆம் ஆண்டு ஒரு இடைத்தேர்தலும் நடைபெற்றுள்ளன. 9 முறை அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை, சுயேட்சைகள் 2 முறை, திமுக ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை அதிமுகவே இத்தொகுதியைத் தொடர்ந்து இருமுறை தக்க வைத்துள்ளது. தற்போது அதிமுக-வின் அய்யப்பன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஆவார். ஃபார்வர்டு பிளாக் கட்சியின் கோட்டையாகத் திகழும் உசிலம்பட்டி தொகுதியில் மூக்கையாத்தேவர் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

உசிலம்பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி வட்டங்களும், உசிலம்பட்டி, எழுமலை பேரூராட்சிகளும் இந்தத் தொகுதியில் அடங்கி உள்ளன. முக்குலத்தோரில் கள்ளர் சமூகம் இங்கு பெரும்பான்மையாக உள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக பட்டியல் சமூக மக்களும் உள்ளனர். தெலுங்கு மொழி பேசுவோர் மற்றும் இஸ்லாமியர்களும் குறிப்பிட்ட சதவிகிதத்தில் இங்கு வாழ்கின்றனர்.

வாக்காளர்கள் எண்ணிக்கை

தற்போதைய இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், உசிலம்பட்டி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,31,411, பெண் வாக்காளர்கள் 1,32,724, மூன்றாம் பாலினத்தவர் 6 என மொத்த வாக்காளர்கள் 2,64,141 பேர் உள்ளனர். கடந்த 2021 தேர்தலின் போது இதன் மொத்த வாக்காளர்கள் 2,84,858, ஆனால் பதிவான வாக்குகள் 2,12,513. இதில் அதிமுக வேட்பாளர் அய்யப்பன் பெற்ற வாக்குகள் 71,255, அவருக்கு அடுத்தபடியாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்த கதிரவன் 63,778 வாக்குகளையும் பெற்றார்.

மக்கள் எதிர்பார்ப்பு

உசிலம்பட்டி குறித்து கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் முனைவர் துரைசிங்கம் கூறுகையில், ''இளம் வயதிலேயே பாதுகாப்புக் கருதி பெண்களை திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இங்கு உள்ளது. இதனைத் தவிர்க்க, இங்கு பெண்களுக்கான தனிக் கல்லூரி உருவாக்கப்படுவது மிகவும் அவசியம். டிகிரி முடித்த இளைஞர்கள் இங்கு நிறைய பேர் உள்ளனர். அவர்கள் போட்டித் தேர்வுகளுக்காக மதுரைக்குதான் செல்ல வேண்டியது உள்ளது. இதனைத் தவிர்க்க, இப்பகுதியில் அரசே நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு மையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இளம் வயதிலேயே கணவனைப் பறிகொடுத்த அதிகமான கைம்பெண்கள் இங்கே உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களோ, தொழிற்சாலைகளோ சிறப்பு கவனத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட வேண்டும். அதுமட்டுமன்றி, இந்தப் பகுதியில் பல்வேறு வகையான பூக்கள் விளைவிக்கப்படுகின்றன. அவற்றை இங்கிருந்து மதுரை பரவை மற்றும் மாட்டுத்தாவணி சந்தைகளுக்குத்தான் கொண்டு செல்ல வேண்டிய நிலை. அந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் உசிலம்பட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலைகளோ அல்லது குளிர்பதனக் கிடங்குகளோ அமைக்கப்பட வேண்டும்'' என்றார்.

மேலூர் சட்டமன்றத் தொகுதி

மேலூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, கடந்த 1952ஆம் ஆண்டு முதல் 16 பொதுத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. காங்கிரஸ் 7 முறையும், அதிமுக 6 முறையும், திமுக 2 முறையும், தமாகா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தொகுதி தொடர்ந்து அதிமுக-வின் வசமே உள்ளது. பெரிய புள்ளான் (எ) செல்வம் கடந்த 2016 முதல் தற்போது வரை சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார். கடந்த 1952 மற்றும் 1957 தேர்தல்களில் இது இரட்டை உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது. 1957இல் கக்கன் வெற்றி பெற்றார்.

தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் செல்வாக்கான தொகுதியாகும். முக்குலத்தோரும், முத்தரையர் சமூகத்தினரும் இத்தொகுதியின் பெரும்பான்மையினராக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக பட்டியல் சமூகத்தினரும் இஸ்லாமியர்கள், கோனார்கள் உள்ளிட்ட பிற சமூகத்தினரும் உள்ளனர். கொட்டாம்பட்டி மற்றும் மேலூர் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

வாக்காளர்கள் எண்ணிக்கை

தற்போதைய இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், மேலூர் சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,13,091, பெண் வாக்காளர்கள் 1,14,687, மூன்றாம் பாலினத்தவர் 11 என மொத்தம் 2,27,789 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2021 தேர்தலின்போது, இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,44,996, தேர்தலில் பதிவான வாக்குகள் 1,81,898, வெற்றி பெற்ற அதிமுகவின் பெரிய புள்ளான் பெற்ற வாக்குகள் 83,344, அடுத்தபடியாக வந்த திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ரவிச்சந்திரன் பெற்ற வாக்குகள் 48,182 வாக்குகள் ஆகும்.

மக்கள் எதிர்பார்ப்பு

மேலூர் குறித்து பெரியாறு பாசன கால்வாய் நீட்டிப்பு மற்றும் விவசாயிகள் வாழ்வாதார இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கம்பூர் செல்வராஜ் கூறுகையில், ''விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை சார்ந்துள்ள கொட்டாம்பட்டிக்கு உட்பட்ட 16 ஊராட்சிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாசன வசதி இதுவரை கிடையாது. பெரியாறு பாசனக் கால்வாயை இப்பகுதிகளுக்கு நீட்டிப்புச் செய்ய வேண்டும். காவிரியிலிருந்தும் கூட பாசனத்திற்காக தண்ணீர் கொண்டு வரலாம். மிக வறண்ட நிலமாக மாறியுள்ள இந்தப் பகுதியில் வேளாண்மை சிறப்பதற்கு வழிவகைகள் காணப்பட வேண்டும்.

இந்தத் துயரங்களை கரோனா பெருந்தொற்றுக் காலங்களில் நாங்கள் உணர்ந்தோம். இந்தப் பகுதியில் தென்னை மரங்கள் அதிகம் இருக்கின்ற காரணத்தால், அது சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். தென்னை வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதே போன்று மாமரங்களுக்கும் திட்டங்கள் வேண்டும். மேலூரில் பஞ்சாலை ஒன்றும் முன்னர் இயங்கியது. அது ஏறக்குறைய 3 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை அளித்தது. தற்போது அந்த ஆலை மூடப்பட்டுள்ளது. அதனை தொடங்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், இதையெல்லாம் செய்யாமல் மக்கள் வாழ்வாதாரத்திற்கு முக்கியமாக உள்ள கல்லங்காடு பகுதியில் சிப்காட் கொண்டு வருவதில் தமிழக அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மகளிர் கல்லூரி ஒன்று இப்பகுதியில் உருவாக்கப்பட வேண்டும். இந்தப் பகுதி கல்குவாரித் திட்டங்களை ரத்து செய்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேலூர் சட்டமன்றத் தொகுதியை அறிவிக்க வேண்டும்'' என்கிறார்.

மேற்கண்ட மூன்று தொகுதிகளும் கிராமப்புறம் சார்ந்தவை ஆகும். விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவையே முதன்மை தொழிலாக உள்ளது. முக்குலத்தோர் அதிகமாக வசிக்கின்ற தொகுதி என்பதால் இயல்பாகவே அதிமுகவுக்கு சாதகமான தொகுதியாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு டிடிவி தினகரனின் அமமுக தனித்து போட்டியிட்டும்கூட அதிமுகவின் வெற்றி பாதிக்கப்படவில்லை. ஆனால் இந்த முறை துரதிஷ்டவசமாக சசிகலா தனி கட்சியை தோற்றுவித்திருக்கிறார். அவர் யாருக்கு ஆதரவு தரப் போகிறார் என்பதும்கூட அதிமுகவின் தலையெழுத்தை நிர்ணயிக்க வாய்ப்புண்டு.

மூன்றாவது பெரிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாம் தமிழர், மூன்று தொகுதிகளிலும் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளது. அதே போன்று முதல் தலைமுறை வாக்காளர்களில் கணிசமானோர் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்கக் கூடும் என்பது அக்கட்சியினரின் எதிர்பார்ப்பு. ஆனால் அதிமுக, திமுக ஆகியவை தனது கூட்டணி கட்சிகளின் தலைவர்களோடும், அக்கட்சிகளின் தலைவர்களும் நேரடியாக களத்தில் மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்வர். அதேபோன்று நாம் தமிழர் கட்சியின் சீமானும், அவரது கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் களத்தில் இறங்கி பம்பரமாய் சுழல்வர். விஜய்யை பொறுத்தவரை அப்படி களம் இறங்கி பரப்பரை செய்வதற்கு வாய்ப்பு இல்லை. அவரது கட்சியின் அடுத்த கட்ட நிர்வாகிகள் எந்த அளவிற்கு மக்களை தங்களின் பரப்புரை உத்தியால் இருக்கப் போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் சட்டமன்ற தொகுதிகளை அதிமுக தக்க வைக்குமா? இல்லையா? என்பதை தீவிர பரப்புரையிலும், மக்களுக்கு தருகின்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் முடிவாகும்.‌

இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் அமமுக எத்தனை இடங்களில் போட்டி? - டிடிவி தினகரன் விளக்கம்