EXCLUSIVE | “எங்க ஊருக்கும் கரண்ட் வந்துருச்சு” - அரை நூற்றாண்டு கால போராட்டத்தில் வென்ற தீர்த்தக்காடு
50 ஆண்டுகால மின்சார பிரச்சனை முடிவுக்கு வந்தாலும் முறையான சாலை வசதி, கழிப்பறை, தண்ணீர் வசதி உள்ளிட்டவற்றையும் இந்த அரசு செய்து தர வேண்டும் என தீர்த்தக்காடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Published : July 7, 2026 at 4:22 PM IST
- BY இரா. சிவக்குமார்
"40 வருஷமா இங்க இருக்கேன். எந்த அதிகாரியும் எங்க ஊருக்கு வந்து பார்த்தது இல்ல. ஒன்னாப்புல இருந்து 12 வரைக்கும் சிம்னி விளக்குலதான் படிச்சேன். ராத்திரியாயிருச்சுன்னா எங்கயும் நடமாட முடியாது. காலை 4 மணிக்கு தான் திரும்ப வெளிய போக முடியும்” என்கிறார் ஆட்டோ ஓட்டுநர் குமார்.
மகாலட்சுமி என்ற பெண் கூறுகையில், “செல்ஃபோன் சார்ஜ் ஏத்துறதுக்கு கூட அஞ்சோ பத்தோ குடுத்தாதான் ஏத்தித் தருவாக. சில நேரங்கள்ல அதையும் செஞ்சு தரமாட்டாக. நம்ம ஊரச் சுத்தி வெளிச்சமா இருக்கும்போது, இங்க மட்டும் இருட்ட பாக்குறது வேதனையா இருக்கும். இப்போ அந்த நிலைம மாறப்போகுதுன்னு நெனக்கிறப்போ சந்தோசமா இருக்கு” என்கிறார்.
யார் இவர்கள்? எதற்கு இத்தகைய துன்பமும் இன்பமும் இரண்டற கலந்த உணர்வோடு பேசுகின்றனர்? என்று கேட்க தோன்றுகிறா? இருளில் நடக்கும் ஒருவருக்கு ஒரு சிறு வெளிச்சம் எத்தகைய மகிழ்ச்சியை கொடுக்குமோ, அதுபோன்றதொரு மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர் மதுரை தீர்த்தக்காடு ஊர் மக்கள்.
ஈடிவி பாரத் செய்தியின் விளைவாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலையீட்டால் புதியதொரு விடியலைக் காணவுள்ள தீர்த்தக்காடு குறித்த சிறப்புத் தொகுப்பு.
மதுரை மாநகர் அண்ணாநகர் அருகேயுள்ள வண்டியூர் தீர்த்தக்காடு பகுதி குறித்து கேள்விப்பட்டு, அந்த ஊரின் நிலைமையை அறிய கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி ஈடிவி பாரத் ஊடகக்குழு அங்கு சென்றது. சுமார் 300 குடும்பங்கள், 900 வாக்காளர்கள் கொண்ட கிராமம் அது. அதில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வயதில் 200க்கும் மேற்பட்ட பிள்ளைகள் உள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமம் அனுபவித்து வரும் துயரத்தை வார்த்தைகளால் சொல்லி மாளாது.
சுமார் 14,600 நாட்கள், 3,50,400 மணி நேரங்கள் என மின்சாரம் இன்றி ஒட்டுமொத்த ஊரே வாழ்ந்ததை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால் தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் களத்தில் இறங்கி நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளது. விளக்கு வெளிச்சம் காணாத தீர்த்தக்காடு பகுதி மக்கள் அந்த ஒளிப்பிரவாகத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்பதைவிட வேறென்ன நல்ல செய்தி இருக்கப் போகிறது?
வாருங்கள், தீர்த்தக்காட்டில் மீண்டும் ஒரு களப்பார்வை மேற்கொள்ளலாம்.
ஈடிவி பாரத் ஊடகக்குழு தீர்த்தக்காட்டிற்கு சென்றதும் அங்குள்ள ஆதிதிராவிடர் குடியிருப்போர் பாதுகாப்பு நலஉரிமைச் சங்கத்தின் தலைவர் முத்துப்பாண்டியன், அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பொதுமக்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார். அதை பெண்கள் மிக கவனமாக கேட்டுக் கொண்டிருந்தனர். நம்மைப் பார்த்ததும் துள்ளி எழுந்த முத்துப்பாண்டியன், “இவுக கொண்டுவந்த செய்திதான் இன்னிக்கு உலகத்துக்கே போயிருக்கு” என உற்சாகமாக நம்மை அறிமுகம் செய்தார். சிறிது நேரம் அந்த மரத்தின் அடியில் பெண்களோடு பேசிக்கொண்டிருந்தோம். பிறகு முத்துப்பாண்டியன் மகன் பொறியாளர் தங்கப்பாண்டியன் நம்மை ஊருக்குள் அழைத்துச் சென்றார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மின் இணைப்பு பணிகள்
ஊருக்குள் மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாகத் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சில தெருக்களில் மின் கம்பங்கள் ஊன்றப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அருகிலிருந்த ஒரு வீட்டில் பழனி என்ற பெரியவர் கட்டிலில் படுத்திருந்தார். நம்மைப் பார்த்தவுடன் எழுந்து, தனது வீட்டில் பதிக்கப்பட்ட மின் இணைப்புப் பெட்டியைக் காண்பித்து, வீட்டிலுள்ள விளக்குகளை, மின்விசிறியை இயக்கிக் காட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அடுத்தடுத்து நம்மை பார்த்த அனைவரும் தங்களது உணர்வுகளையும், இத்தனை நாட்களாக தாங்கள் பட்ட சிரமங்களையும் நம்முடன் பகிரத் தொடங்கினர்.

எங்க ஊருக்கு யாரும் வரமாட்டங்க
பழனி பேசும்போது, “எங்க ஊரு பொம்பள புள்ளைக வெளிய தெருவுல போக முடியாத நிலைம கடந்த 50 வருசமா இருந்துச்சு. பெரிய அதிகாரிக, அரசியல்வாதிக எல்லாம் வந்தாலும், என்னான்னு இதுவரைக்கும் கண்டுக்கவே இல்ல. ஊருக்குள்ளாற வாறதில்ல, மெயின்ரோட்டோடவே போயிருவாக. கலெக்டரு, தாசில்தாருன்னு பூரா பேருக்கும் மனு குடுத்தும் ஒன்னும் நடக்கல. எங்க சங்கத்து ஐயா முத்துப்பாண்டியோட தொடர்முயற்சியால இன்னிக்கி எங்க வீட்டுக்கு கரண்ட் வந்துருக்கு. ரொம்ப சந்தோசமா இருக்குங்க” என்றார் மகிழ்ச்சியுடன்

கண்ணீர் விட்ட மகாலட்சுமி
அடுத்து நம்முடன் பேசிய ஒரு பெண், “எம்பேரு மகாலட்சுமி. இந்த ஊருலதான் பொறந்தேன். வளந்தேன். எனக்கு வயசு 42 ஆகுது. எம்புள்ளைகளும் படிக்குதுக. இந்த இருட்டுக்குள்ள அதுகளும் கஷ்டப்படுதுக. எப்பிடியாது நம்ம வீட்டுக்குள்ள கரண்ட்ட பாத்துரணும்னு ரொம்ப எதிர்பார்ப்போட இருந்த என்னோட அப்பா சில மாசங்களுக்கு முன்னாலதான் செத்துப்போனாரு” என்று சொல்லியபடி மகாலட்சுமி விம்மி அழுதார்.
தொடர்ந்து பேசிய அவர், “செல்ஃபோன் சார்ஜ் ஏத்துறதுக்கு அஞ்சோ பத்தோ குடுத்தா தான் ஏத்தித் தருவாக. சில நேரங்கள்ல அதையும் செஞ்சு தரமாட்டாக. நம்ம ஊரச் சுத்தி வெளிச்சமா இருக்கும்போது, இங்க மட்டும் இருட்ட பாக்குறது வேதனையா இருக்கும். இப்போ அந்த நிலைம மாறப்போகுதுன்னு நெனக்கிறப்போ சந்தோசமா இருக்கு” என்கிறார்.

சிம்னி வௌக்குதான்
தீர்த்தக்காடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமார் கூறுகையில், “40 வருசமா இங்க இருக்கேன். கலெக்டரு ஆபிசுக்குள்ள குடியேறுற போராட்டம், சாகும்வரை உண்ணாவிரதம்னு பல போராட்டங்கள நடத்துனோம். முன்னாடி அமைச்சரா இருந்த மூர்த்திகூட எங்க பகுதிக்கு வந்ததே இல்ல. எந்த அதிகாரியும் வந்து பாக்கல. ஒன்னாப்புல இருந்து 12 வரைக்கும் சிம்னி வௌக்குலதான் படிச்சேன். ராத்திரியாயிருச்சுன்னா எங்கயும் நடமாட முடியாது. காலை 4 மணிக்கு விடிஞ்சா தான் வெளிய போக முடியும்” என்றார் வேதனையுடன்.
தீர்த்தக்காடு பகுதிக்கு நில ஆர்ஜிதம்
தீர்த்தக்காடு ‘தொல்திருமாவளவன் நகர்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் புதிய சர்வே எண் 112/2ஏ, 2பி. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது 9 ஏக்கர் 13 சென்ட் பரப்பளவிலான இந்த நிலத்தை ஆர்ஜிதம் செய்து, இங்குள்ள ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு கடந்த 1987 மற்றும் 1995ஆம் ஆண்டுகளில் இலவசமாக வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளது. ஆனால் சிலர் இந்த இடத்தை ஆக்கிரமித்திருந்த நிலையில், இந்த 9 ஏக்கர் நிலம் தங்களுக்கானது தான் என மேலூர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை வழக்கு நடத்தி இங்குள்ள மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இருந்தாலும் இன்னமும் தங்களுக்கான அடிப்படை வசதிகளுக்கு போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

எங்களுக்காக போராடிய தலைவர்கள்
பொறியாளர் தங்கப்பாண்டியன் கூறுகையில், “தமிழீழத்துல விடுதலைப்புலிகள் எப்படி மண்ணுக்காகப் போராடினார்களோ அதுபோன்ற போராட்டம்தான் தீர்த்தக்காட்டிலும் இதுவரை நடந்திருக்கிறது. கடந்த 1979ஆம் ஆண்டு எஸ்சி/எஸ்டி நிதி மூலமா ஆதிதிராவிடர் மக்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலம்தான் தீர்த்தக்காடு என்று அழைக்கப்படுகிற இந்த 9 ஏக்கர். ஆனால் நிறையப்பேர் இந்த இடத்தை கோயில் நிலம், புறம்போக்கு இடம் என்று அவதூறாக பேசுகின்றனர்.
கடந்த 1982ஆம் ஆண்டே இருந்த இடத்தில் குடியிருப்பதற்காக 349 பேருக்கு தீர்த்தக்காடு குடியிருப்போர் சங்கத் தலைவர் முத்துப்பாண்டியன் தலைமையில், இந்திய குடியரசுக் கட்சியின் அப்போதைய தலைவர் செ.கு.தமிழரசன் முன்னிலையில அனுபோகப் பட்டா வழங்கப்பட்டது. அப்போதிருந்த தமிழக அரசு, இவர்களை குடியமர்த்தாமல் விட்டுவிட்டது. இந்த நிலத்துக்காக செ.கு.தமிழரசன், இளையபெருமாள், கிருஷ்ணப் பறையனார், வை.பாலசுந்தரம் ஆகியோரைத் தொடர்ந்து 90களிலிருந்து விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் தொடர் போராட்டம் நடத்தியுள்ளனர்” என்கிறார்.
அடிப்படை வசதிகள் எப்போது?
மின்சாரம் கிடைத்திருப்பதை கடந்த 50 ஆண்டுகாலப் போராட்டத்தின் வெற்றியாக இங்குள்ள மக்கள் பார்த்தாலும், அடிப்படை வசதிகளில் மிகவும் பின்தங்கியுள்ள நிலையை மாற்றவேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். முறையான சாலை வசதி, கழிப்பறை, தண்ணீர் வசதி உள்ளிட்டவற்றையும் இந்த அரசு செய்து தர வேண்டும். அவ்வாறு செய்தால்தான் விடுதலை பெற்ற இந்தியாவில் தங்களுக்கும் விடுதலை கிடைத்திருப்பதாக எண்ணிக்கொள்ள முடியும் என ஒருசேர கோரிக்கை வைக்கின்றனர். அதிகாரிகள் மின் இணைப்பு வழங்கியதும் அதையும் செய்து தருவார்கள் என்ற எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் காத்திருக்கின்றனர் தீர்த்தக்காடு மக்கள்.

