டெண்டர் முறைகேடு வழக்கு; நேரில் ஆஜராகாத எ.வ.வேலு - சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதாக கடிதம்
லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எ.வ வேலுவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published : July 3, 2026 at 10:58 PM IST
சென்னை: டெண்டர் முறைகேடு தொடர்பாக இன்று நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அவர் நேரில் ஆஜராகவில்லை.
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.3.23 கோடி முறைகேடு செய்ததாக, முன்னாள் நெடுஞ்சாலை அமைச்சர் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள் 9 பேர் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 20 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
'அறப்போர் இயக்கம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையகத்தில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக, சென்னையில் 4 இடங்கள், திருவண்ணாமலையில் 4 இடங்கள், கரூரில் 7 இடங்கள், திண்டுக்கல்லில் 2 இடங்கள், கோவையில் 2 இடங்கள், திருப்பூரில் 1 இடம் என மொத்தம் 20 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சோதனையின் போது, நெடுஞ்சாலைத்துறை தொடர்பான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள், சொத்து மதிப்பு மற்றும் முறைகேட்டை உறுதிப்படுத்தும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும், ரூ. 40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஏற்கனவே புகார்தாரர் அனுப்பிய ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் நேரடியாக விசாரணை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியது.
ஜூலை 3-ஆம் தேதியான இன்று சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியது. அவரது தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி கால அவகாசம் கேட்டுச் சென்றுள்ளனர்.
மேலும், எ.வ.வேலு எழுதி அனுப்பிய விளக்க மனுவை அவரது வழக்கறிஞர்கள், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் நேரில் அளித்தனர்.
அந்த மனுவில், "என் மீது தொடுக்கப்பட்ட (FIR) வழக்கு சம்மந்தமாக 03.07.2026 காலை 11.30 மணியளவில் விசாரணைக்கு வரச்சொல்லி சென்னை ஆழ்வார்பேட்டை எனது இல்லத்தில் காவல் துறைமூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதை அறிந்தேன். நான் இப்பொழுது 27.06.2026 முதல் வெளிநாட்டில் சிங்கப்பூரில் உள்ள LIFELINE HEART CENTRE -ல் மருத்துவர் ஜெயராம்லிங்கம நாயக்கர் அவரின் மேற்பார்வையில் இருதய தொடர் சிகிச்சை பெற்று வருகிறேன். மேலும் 10 தினங்களுக்கு மருத்துவசிகிச்சை பெற அறிவுறுத்திறுத்தியுள்ளார்கள். சிகிச்சைக்கு பின் தங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறென்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எ.வ வேலுவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

