ETV Bharat / state

EXCLUSIVE: "பதவி கொடுங்க அல்லது தேர்தல் வையுங்க" - அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா கூறுவது என்ன?

சட்டமன்ற உறுப்பினர் இல்லாததால் அம்பாசமுத்திரம் தொகுதியில் மக்கள் பணி பாதிக்கப்படுவதை நினைத்து வருத்தப்படுகிறேன் என இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார்.

இசக்கி சுப்பையா ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி
இசக்கி சுப்பையா ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 2, 2026 at 4:15 PM IST

3 Min Read
Choose ETV Bharat

-BY இரா மணிகண்டன்

திருநெல்வேலி: சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கொடுத்த கடிதத்தை திரும்ப பெற முடிவெடுத்தது ஏன் என்பது குறித்து இசக்கி சுப்பையா, ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம், தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக உருவெடுத்ததையடுத்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் அடுத்தடுத்து தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா

அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்த இசக்கி சுப்பையாவும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தார். இசக்கி சுப்பையா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியின்போது அமைச்சராக இருந்தவர்.

மூன்றாவது முறையாக அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இவர் குறிப்பாக அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.தி.மு.க.வின் அடையாளமாக அறியப்பட்டார். மக்களிடம் எளிமையாக பழகக் கூடியவர். எனவே இசக்கி சுப்பையா, அம்பாசமுத்திரம் தொகுதியை அ.தி.மு.க.வின் கோட்டையாக உருவாக்கி வைத்திருந்தார்.

இசக்கி சுப்பையா ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி (ETV Bharat Tamil Nadu)

ஆனால் ஒரே தேர்தலில் மனம் மாறி அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இசக்கி சுப்பையாவின் முடிவால் மக்களிடையே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இசக்கி சுப்பையாவுக்கு சமீபத்தில் தான் த.வெ.க.வில் மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட அமைப்பு செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டது.

பதவியை திரும்ப கேட்கும் இசக்கி சுப்பையா

இந்நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவதாகவும் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக பணி செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் இசக்கி சுப்பையா சட்டப்பேரவைத் தலைவரிடம் சமீபத்தில் மனு அளித்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதில் தேர்தல் ஆணையம் தாமதம் காட்டி வருகிறது. எனவே இசக்கி சுப்பையாவின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் ராஜினாமா செய்தால் அதனை திரும்ப பெற அரசு விதியில் இடமில்லை என்றும், இடைத்தேர்தல் நடத்துவது தான் தீர்வு என்றும் சட்டப்பேரவை செயலாளர் நேற்று (செப்டம்பர் 1) விளக்கம் கொடுத்திருந்தார்.

இதுபோன்ற சூழ்நிலையில் இசக்கி சுப்பையாவின் இந்த திடீர் முடிவு குறித்து அவரிடம் ஈடிவி பாரத் ஊடக குழு சார்பில் பிரத்யேக நேர்காணல் எடுக்கப்பட்டது. நாம் முன்வைத்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை பார்க்கலாம்.

  • எம்.ஜி.ஆர்.ஐ தலைவராக ஏற்றுக்கொண்டு அ.தி.மு.க.வில் பயணித்தீர்கள். தற்போது விஜய்யை தலைவராக ஏற்றுக் கொண்டு தான் த.வெ.க.வில் இணைந்து, எம்.எல்.ஏ. பதிவியையும் ராஜினாமா செய்தீர்கள். ஆனால் திடீரென ராஜினாமாவை திரும்ப பெற நினைப்பது ஏன்?

எம்.ஜி.ஆரை தலைவராக ஏற்றுக் கொண்டுதான் அ.தி.மு.க.வில் இணைந்தேன். 1984-ஆம் ஆண்டு கல்லூரி படிக்கும் போதே இதை நான் கூறினேன். தற்போது இன்னொரு எம்.ஜி.ஆர்.-ஆக தற்போதைய முதலமைச்சர் விஜய் செயல்படுகிறார். எனவே தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். அதிமுக தலைமை இப்போது சரி இல்லை. எனக்கு அதிமுக தலைமை பிடிக்கவில்லை. அதிமுகவில் எனது எம்எல்ஏ பதவியை தகுதி நீக்கம் செய்தது எதற்காக? எந்த அடிப்படையில் இந்த முடிவை எடுத்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை. அதனால் தான் நானே பதவியை ராஜினாமா செய்தேன்.

  • உங்கள் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இது தொடர்பாக சட்டப்பேரவை தலைவரிடம் விளக்கம் கேட்டீர்களா?

எனது ராஜினாமாவை சட்டப்பேரவை தலைவர் நன்கு விசாரித்து ஏற்றுக்கொண்டார். ஆனால் அதை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காக அதிமுக எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடுத்தார். அது நிலுவையில் இருப்பதால் எனது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்று கேட்டிருக்கிறேன். ஏற்றுக்கொண்டால் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட விடுங்கள் என்று தான் கேட்கிறேன்.

  • ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என முடிவெடுத்ததன் பின்னணியில் அரசியல் காரணங்கள் ஏதும் இருக்கிறதா?

நான் ராஜினாமாவை முழு மனதோடும் சுய நினைவோடும் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் கொடுத்தேன். அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். எனவே, அதுவரை அ.தி.மு.க.வில் நான் என்னவாக இருக்கிறேன் என்பதை தெரிந்து கொள்ளவே இப்போது விளக்கம் கேட்டிருக்கிறேன்.

  • உங்கள் ராஜினாமாவால் அம்பாசமுத்திரம் தொகுதியில் மக்கள் பணி பாதிக்கப்பட்டிருப்பதை உணர்கிறீர்களா?

சட்டமன்ற உறுப்பினர் இல்லாததால் அம்பாசமுத்திரம் தொகுதியில் மக்கள் பணி பாதிக்கப்படுவதை நினைத்து வருத்தப்படுகிறேன்.

  • உங்களின் அடுத்த கட்ட முடிவு என்ன?

அடுத்த கட்டமாக நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வருகிறதோ அதற்கு தலை வணங்குவேன்.

  • த.வெ.க.வில் முழு திருப்தியாக பயணிக்கிறீர்களா?

நான் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது சேவை செய்து கொண்டிருக்கிறேன். அதுதான் உண்மை. அரசியல் என்பது பொது சேவை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது. இப்போதும் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து அம்பாசமுத்திரம் பகுதியில் எனது பணியை செவ்வனே செய்து வருகிறேன்.

  • உங்களுக்கு த.வெ.க.வில் சமீபத்தில் இரண்டு பதவிகள் வழங்கப்பட்டது, அதில் திருப்தி இருக்கிறதா?

தமிழக வெற்றிக் கழகத்தில் சேரும்போது எனக்கு அந்த பதவி தாருங்கள் இந்த பதவி தாருங்கள் என நான் கேட்கவில்லை. அவர்கள் தற்போது கொடுத்த பதவியில் சிறப்பாக செயல்பட்டு இயக்கத்தை வலுப்படுத்த பாடுபடுவேன் என்று இசக்கி சுப்பையா கூறினார்.

இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கு; ட்விஸ்ட் வைத்த இசக்கி சுப்பையா - மறுத்த நீதிபதிகள்
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் - அமைச்சர் அருண் ராஜ் கொடுத்த 'அப்டேட்'