'பெரியாரின் கொள்கைகளை படித்ததும் பக்தி மறந்துவிட்டது' - பள்ளி விழாவில் மாவட்ட ஆட்சியர் பேச்சு
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். திருமந்திரத்தில் ''ஒன்றே குலம். ஒருவனே தேவன்'' என்று சொல்லி வைத்துள்ளனர் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார்.

Published : January 10, 2026 at 4:28 PM IST
ஈரோடு: பெரியாரின் கொள்கைகளை படித்ததும் எனக்கு பக்தி மறந்து விட்டது என பள்ளி விழாவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பேசினார்.
ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் காஞ்சிகோயில் பகுதியைச் சேர்ந்த கே.பி. முத்துசாமி மற்றும் அவரது சகோதரர்கள் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்க 7 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் தீரன் பாசறை மற்றும் முன்னாள் மாணவர்கள் கட்டமைப்பு சார்பில் பள்ளி விளையாட்டு மைதானம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பேசுகையில், ''பள்ளி மாணவிகளை காட்டிலும் மாணவர்கள் நெற்றியில் பட்டையை போட்டு வந்துள்ளனர். மாணவிகள் கூட சிறிய பொட்டு வைத்துள்ள நிலையில் மாணவர்கள் தான் பக்திமயமாக வந்துள்ளனர்.
நானும் பள்ளி பருவத்தில் பக்திமயமாக தான் இருந்தேன். திருநெல்வேலியில் காமராஜர் அரசு மேல்நிலை பள்ளியில் பயின்ற போது அங்கே பிள்ளையார் கோயிலில் சாமி கும்பிட்டு ஆசிரியர் இன்று எங்களை அடிக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டு மரத்தின் பட்டையை உரித்து சட்டை பையில் போட்டு வருவோம். ஆனாலும் நாங்கள் செய்யும் குறும்பு மற்றும் மதிப்பெண் குறைவாக எடுத்தால் கட்டாயம் அடி விழும்.
இவ்வாறு ஒரு நம்பிக்கையின் காரணமாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் மரத்தின் பட்டையை உரித்ததால் மரம் தோல் உரிந்து காணப்படும். அது போல இங்குள்ள மாணவர்களை பார்த்தால் தெரிகிறது.
இதன் பிறகு தந்தை பெரியார் கொள்கைகளை படித்த பிறகு பக்தி என்பது எனக்கு மறந்து விட்டது. பக்தி என்ற அடிப்படையிலும், மதம் என்ற அடிப்படையிலும் மக்களை பிளவுபடுத்தும் எண்ணம் வேண்டாம் என்பது நீண்ட காலமாக எனக்குள்ளே இருந்து வருகிறது.
இதன் பிறகு பல்வேறு மதங்களை பற்றியும் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு மதத்தில் பிறந்தால் அந்த மதத்தை பின்பற்றி வருபவர்கள் தான் உலகத்தில் அதிகம் பேர். பல்வேறு மதங்களிலும், பல்வேறு சமூகங்களிலும் பல நல்ல பழக்கங்கள் உள்ளன. அதனை நாம் கடைபிடிக்க வேண்டும்.
புத்தகம் படித்த போது தான் எல்லா மதங்களிலும் சொல்ல கூடியது அன்பு ஒன்று தான். மனிதர்களில் பிரிவு இல்லை. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். திருமந்திரத்தில் ''ஒன்றே குலம். ஒருவனே தேவன்'' என்று சொல்லி வைத்துள்ளனர். அதை எல்லாம் நாம் புரிந்து கொண்டால் சாதி, மதம் பெயரில் மோதல் இல்லாமல் மனிதர்களாக நாம் எல்லோரும் ஓன்று என்ற எண்ணத்தில் வாழ முடியும் என்ற அடிப்படையை புரிந்து கொண்டேன்.
தற்போது எனக்கு மதம் பெரிய விஷயமாக இல்லை. மனிதர்கள் தான் முக்கியம். அனைத்து உயிர்களையும் நமது உயிர் போலவே நினைத்து பார்க்க வேண்டும். மாணவர்கள் புற அடையாளங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தமிழ் இலக்கியங்களிலும், மதத்திலும் என்ன சொல்லி உள்ளனர்? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.

