பெண் வாக்காளர்களே அதிகம்... இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஈரோடு ஆட்சியர்
ஈரோடு மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

Published : February 23, 2026 at 3:06 PM IST
ஈரோடு: சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. அதன்படி, வெளியான வாக்காளர் பட்டியலில் கிட்டத்தட்ட ஒரு கோடி பெயர்கள் நீக்கப்பட்டு, தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.44 கோடியாகக் குறைந்தது. இதனிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.
அந்த வகையில், பிப்.10 ஆம் தேதி வரை நடந்த முகாமில், 34 லட்சத்திற்கும் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைய விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, இன்று மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதேபோல, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஈரோடு மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கந்தசாமி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 8,38,466 பேரும், பெண் வாக்காளர்கள் 9,01,574 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 182 பேர் என மொத்தம் 17,40,222 வாக்காளர்களின் பெயர் இடம் பெற்றுள்ளனர்.
| இதையும் படிங்க: எழும்பூரில் 4-வது நாளாக சீரமைப்பு பணிகள் - தாம்பரம் பேருந்து நிலையத்தில் குவியும் பயணிகள் |
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறியதாவது, “எஸ்ஐஆர் பணிக்கு முன்பு, 19,97,189 வாக்காளர்கள் இருந்தனர். இதில், எஸ்ஐஆர் கணக்கெடுப்பு படிவத்தில் முறையான விவரம் இல்லாதது, முகவரி மாற்றம் உட்பட பல்வேறு காரணங்களால் 3,25,429 பேர் நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து நடந்த வாக்காளர்கள் சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்களின் மூலமும், உதவி வாக்குச்சாவடி அலுவலர்கள் நடத்திய நேர்காணல் மூலமும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து 3.94 சதவீதம், அதாவது ஈரோடு மாவட்டத்தில் 68,462 பேர் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் 17,40,222 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிடலாம்” என தெரிவித்தார்.

