சீட்டு கிடைத்தால் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி - எர்ணாவூர் நாராயணன் பேட்டி
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு இரண்டு தொகுதிகளை கேட்டுள்ளோம். உறுதியாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வாய்ப்பு கிடைத்தால் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார்.

Published : March 2, 2026 at 5:03 PM IST
சென்னை: விசிகவை தொடர்ந்து சமத்துவ மக்கள் கழகம் மற்றும் மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகள் இன்று திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தின.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் விருப்ப மனு விநியோகப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதே போல, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையிலும் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, திமுக கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கழகம், மக்கள் விடுதலைக் கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டன. பேச்சுவார்த்தைக்கு பின்னர் சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், '' இதுவரை நடந்த தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி அமைத்து திமுக வெற்றிக்காக பாடுபட்டோம். இந்த நிலையில், தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை நடத்த இன்று எங்களுக்கு அழைப்பு வந்தது. திமுகவின் அழைப்பை ஏற்று நாங்கள் கலந்து கொண்டோம். எங்களின் கருத்துக்களை கேட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏழை, எளிய மக்கள் சந்தோசமாக உள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. பெரிய கட்சி முதல் சின்ன கட்சி வரை அழைத்து திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போது ஸ்ரீவைகுண்டத்தில் தீவிர களப்பணிகளை செய்து வருகிறோம். எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு இரண்டு தொகுதிகளை கேட்டுள்ளோம். உறுதியாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வாய்ப்பு கிடைத்தால் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவோம்.'' என்றார்.

இதனை தொடர்ந்து, மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் முருகவேல் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், '' 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி தற்போது வரையிலும் திமுக கூட்டணியில் இருக்கிறோம். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டோம். வரக் கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் இடஒதுக்கீடு தர வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு எங்களின் கருத்துக்களை கேட்டார்கள். மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினேன். கோரிக்கையை பரிசீலித்து நல்ல முடிவை தெரிவிப்போம் என்று கூறியுள்ளனர். இரண்டு சீட்டுகள் கேட்டோம்; அதற்கு ஒரு சீட்டு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்'' என்றார்.
| இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தொடங்கியது மாணவர் சேர்க்கை |

