ETV Bharat / state

திமுக ஆட்சியில் ரூ.4.5 லட்சம் கோடி ஊழல் - ஆளுநரை சந்தித்து மனு அளித்த எடப்பாடி பழனிசாமி

கடந்த 56 மாதங்களாக திமுக அரசு கார்ப்பரேட் நிறுவனம் போன்று செயல்பட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடித்து தமிழ்நாட்டை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

கவர்னர் ஆர்.என் ரவியுடன் இபிஎஸ் தலைமையிலான அதிமுக குழு சந்திப்பு
ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 6, 2026 at 3:49 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் 4.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று நேரில் சந்தித்தார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, தங்கமணி, கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் எம்பி, ஜெயக்குமார் ஆகியோர் சென்றனர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது பேசிய அவர், “2021 ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த பட்டியலை ஆளுநரை நேரில் சந்தித்து வழங்கியுள்ளோம். அனைத்து ஊழல்களுக்கும் உரிய ஆதாரம் உள்ளதால் முழுமையான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி இருக்கிறோம்.

கடந்த 56 மாதங்களாக திமுக அரசு வெளிப்படைத்தன்மை இல்லாமல் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போன்று செயல்பட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, மாநிலத்தை மிகப் பெரிய கடன் சுமையில் தள்ளி இருக்கிறது. இதை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்டி உள்ளோம்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ளதை விட கூடுதலாக 4 லட்சம் கோடி ரூபாய் கடன் அதிகமாகியுள்ளது. நிர்வாக திறனற்ற திமுகவே இதற்கு பொறுப்பு. இந்த அரசு மக்களுக்கு எந்த நல்லதும் செய்யவில்லை. விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக் கூடிய கட்சி திமுக. பல்வேறு துறைகளில் திமுக ஊழல் செய்துள்ளதை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். துறைவாரியாக எவ்வளவு ஊழல் நடைபெற்றது என்பதையும் அவரிடம் சுட்டிக்காட்டி உள்ளோம்.

இதையும் படிங்க: கரூர் சம்பவம்: விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பியது சிபிஐ

நகராட்சி நிர்வாகத் துறையில் 64 ஆயிரம் கோடி ரூபாய், ஊரக வளர்ச்சியில் 60 ஆயிரம் கோடி ரூபாய், சுரங்கம் மற்றும் கனிமவளத்துறையில் 60 ஆயிரம் கோடி ரூபாய், எரிசக்தி துறையில் 55,000 கோடி ரூபாய், பத்திரப் பதிவுத்துறையில் 20 ஆயிரம் கோடி ரூபாய், நெடுஞ்சாலைத் துறையில் 20 ஆயிரம் கோடி ரூபாய், நீர்வளத் துறையில் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சியில் 10,000 கோடி ரூபாய், தொழில் துறையில் 8000 கோடி ரூபாய், பள்ளி கல்வித் துறையில் 5000 கோடி ரூபாய், சுகாதாரத் துறையில் 5000 கோடி ரூபாய், விளையாட்டுத் துறையில் 500 கோடி ரூபாய் என ஊழல் செய்துள்ளனர். ஆட்சி நிர்வாகம் சரியாக இல்லாமல் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

இந்த ஊழல் தொடர்பாக, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

தொடர்ந்து மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. தேர்தலில் மாணவர்களின் வாக்கு தேவை என்பதற்காகவே மடிக்கணினி தற்போது வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து வெளியே வரும் நேரத்தில் மடிக்கணினி வழங்குவதால் என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு தோல்வி பயம் வந்து விட்டதால் பொங்கல் பரிசு போன்ற திட்டங்களை அறிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.