சென்னையில் வேதாந்தா குழும அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
அந்நிய செலவாணி சட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் டெல்லி, மும்பை நகரங்களில் உள்ள வேதாந்தா குழும அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

Published : June 2, 2026 at 3:45 PM IST
சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள வேதாந்தா குழு அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்நிய செலவாணி மேலாண்மை சட்டம் விதிமீறல் தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வேதாந்தா குழும அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்நிய செலவாணி மேலாண்மை சட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக வந்த புகாரியின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் டெல்லி, மும்பை நகரங்களில் உள்ள வேதாந்தா குழும அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அன்னிய செலவாணி விதிமுறைகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் விவரங்கள் விவரமாக ஆய்வு செய்யப்பட்டன. மேலும் சில ஆவணங்களை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர். மேலும் அந்த சோதனையில் கிடைத்த சில ஆவணங்களை கடந்த சில மாதங்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில் இன்று மீண்டும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள வேதாந்தா குழும அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளிநாட்டு நிதி பரிவர்த்தனைகள் முதலீடுகள் மற்றும் பண பரிமாற்றங்கள் தொடர்பாக அதிரடி சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வேதாந்தா குழும அலுவலகத்திலும் அமலாக்கதுறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சோதனையில் சட்டவிரோத பண பரிமாற்றம் ஏதாவது நடைபெற்றுள்ளதா? என பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சோதனையின் முடிவில் சட்ட விரோத பண பரிமாற்றங்களுக்கு முகாந்திரம் உள்ளதா? அந்நிய செலவாணி விதிமீறல்கள் நடைபெற்றுள்ளனவா? என்பது குறித்தும் என்ன மாதிரி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது? என்பது குறித்தும் தகவல் வெளியாகும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் சோதனை காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
வேதாந்த நிறுவனம் உலோகங்கள் மற்றும் முக்கிய கனிம பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு உள்ள முன்னணி நிறுவனம் ஆகும். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இவர்கள் நிறுவனம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

