ETV Bharat / state

சென்னை - குமரி நெடுஞ்சாலையில் அவசரகால மருத்துவமனைகள்; அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

சென்னை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் உலக தரத்திலான ஸ்போர்ட்ஸ் சென்டர் உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

கோவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்
கோவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2026 at 11:08 PM IST

3 Min Read
Choose ETV Bharat

கோவை: சென்னை முதல் கன்னியாகுமரி வரை விபத்து மற்றும் அவசர கால மருத்துவமனைகள் கட்டப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

கோவையில் பல்வேறு ஆய்வுகளையும், ஆலோசனைக் கூட்டங்களையும் மேற்கொள்ள வருகை தந்த தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெரியார் அறிவுலகத்தை ஆய்வு செய்தார்.

பெரியார் அறிவுலகத்தில் அவர் ஆய்வு செய்தபோது, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அவரிடம் திட்டப் பணிகளை விவரித்தனர். அப்போது கட்டுமான பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் வளர்ச்சியில் கோவை மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான நெடுஞ்சாலைகள் இல்லை என்றால் மக்களுடைய பயணமும் தொழில் துறையும் சரியாக இருக்காது.

இதையும் படிங்க.. ஒரு வார்த்தை கூறியிருந்தால் தேமுதிகவுக்கு துணை முதல்வர் பதவி கிடைத்திருக்கும்; ரகசியம் உடைத்த பிரேமலதா விஜயகாந்த்

விளையாட்டு துறையை பொருத்தவரை, கல்வித் துறைக்கு சமமாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் போதை பழக்க வழக்கங்கள் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இதனால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. இவற்றை சரி செய்வதற்கு விளையாட்டு துறையை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். எனவே தமிழகத்தில் உள்ள மைதானங்கள் சீர்செய்யப்படும்.

கோவை நேரு ஸ்டேடியத்தில் பழுதுபார்க்கும் பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதன் கட்டமைப்பு வலுவிழந்து வருகிறது. எனவே, இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று சென்னையில் உள்ள ஸ்டேடியம் போன்று உலகத்தரம் வாய்ந்த ஸ்டேடியமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சென்னை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் உலக தரத்திலான ஸ்போர்ட்ஸ் சென்டர் உருவாக்க வேண்டும். கிராமப்புறத்தில் இருப்பவர்கள், ஏழ்மையில் இருக்கக்கூடியவர்கள் விளையாட நினைக்கும்பொழுது அவர்களுக்கு சர்வதேச தரத்திலான மைதானங்களை உருவாக்க வேண்டும் என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவையெல்லாம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கூடிய விரைவில் முதல்வர், புதிதாக விளையாட்டுக் கொள்கையை அறிப்பார்.

நெடுஞ்சாலை துறை குறித்து ஆய்வு மேற்கொண்டேன். தற்பொழுது வரை சாலைகள் அமைப்பதில் மட்டுமே நெடுஞ்சாலை துறை கவனம் செலுத்தி வந்தது. இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துக்கள் தமிழ்நாட்டில்தான் நடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆண்டுக்கு சுமார் 18,000 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள். இது கரோனா உயிரிழப்பை விட அதிகம். கடந்த கால அரசுகள் சாலை மேம்பாட்டிற்காக செலவுகளை செய்திருக்கும். ஆனால் பாதுகாப்பிற்கு எந்த ஒரு செலவும் செய்தது கிடையாது. சாலைகளுக்கு எந்த அளவிற்கு பட்ஜெட் ஒதுக்கி செலவு செய்கிறோமோ அதே அளவு பாதுகாப்பிற்கும் நிதி ஒதுக்குவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பெரியார் அறிவுலகத்தில் ஆய்வு செய்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
பெரியார் அறிவுலகத்தில் ஆய்வு செய்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா (ETV Bharat Tamil Nadu)

கேரளாவில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதனால் இங்கு உள்ளவர்கள் கேரளாவிற்குள் நுழையும் பொழுது அனைத்து போக்குவரத்து விதிகளையும் பின்பற்றுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் பின்பற்றுவது இல்லை. எனவே போக்குவரத்து விதியை மீறுபவர்களுக்கு கடுமையான சட்டங்களையும் மக்களுக்கான விழிப்புணர்வுகளையும் அபராதம் விதிக்கும் நடைமுறைகளையும் கேரளா அரசு போல் செயல்படுத்துவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின் முடிவுகளை அமைச்சரிடம் ஒப்படைத்து பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படிங்க.. தஞ்சாவூர் கல்லணை கால்வாயை பொதுமக்களுடன் சேர்ந்து சுத்தம் செய்த மாவட்ட ஆட்சியர்

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கூடுதலாக 5 கிலோ மீட்டர் மேம்பாலம் கட்டுவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை நெடுஞ்சாலைத் துறை சார்பில் விபத்து மற்றும் அவசரகால மருத்துவமனைகள் கட்டப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் ஊழல்களால் பாதிக்கப்பட்ட பல்வேறு துறைகளில் நெடுஞ்சாலை துறையும் ஒன்று. முன்பெல்லாம் ஒப்பந்தம் எடுப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட சதவிகித தொகையை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோருக்கு கொடுக்க வேண்டிய அழுத்தம் இருந்தது. ஆனால் இந்த ஆட்சியில் அந்த அழுத்தங்கள் கிடையாது. பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஊழல்களை ஒழிக்கும் பொழுதும், வைப்பு நிதி அந்தந்த துறைகளில் இருக்கும் பொழுதும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியும்.

கோவையில் பெரியார் நூலகம் திட்டம், மூன்று மாதத்தில் முடிக்கப்படும். இந்த கட்டிடத்தில் என்னென்ன குறைகள் உள்ளன என்பது குறித்து பொறியாளர்கள் கூறினார்கள். அதனை உடனடியாக சரி செய்வதற்கு அறிவுறுத்தி இருக்கிறேன்.

பொதுப்பணி துறையும் லாபம் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த துறையும் வளர்ச்சி அடையும். தனியார் நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் இயங்குவதை போல், இந்த துறையும் இயங்க வேண்டும். இங்கும் லஞ்சம் என்பதை ஒழித்து இருக்கிறோம். இனி வரக்கூடிய டெண்டரில் குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட திட்டங்களை தரமாக செய்ய வேண்டும்.

பொதுப்பணி துறையிலும் நெடுஞ்சாலை துறையிலும் பழுதுபார்ப்பு பணிகளிலேயே தேவையில்லாமல் பணத்தை செலவழித்து வருகிறோம். இந்த சூழலில் ஊழல் இல்லாமல் தரமான ஒரு திட்டத்தை நாம் மேற்கொள்ளும் பொழுது குறைந்தது 40, 50 வருடங்கள் அந்தத் திட்டங்கள் நிலைத்திருக்கும்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனை கட்டடங்கள் மோசமான நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் என்னிடம் தெரிவித்திருக்கிறார். எனவே அதற்கு மாற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

பழைய டெண்டர்களில் ஊழல்கள் நடைபெற்றுள்ளதா என ஆடிட்டிங் நடைபெற்று வருகிறது. டிசம்பருக்கு பிறகு தேர்தலுக்கு முன்பு நடந்த டெண்டர்களில் அதிக மதிப்பீடு போடப்பட்டுள்ளன. விரைவில் டெண்டர்கள் நியாயமாக நடைபெற்று அறிவிக்கப்படும். டெண்டர் எடுத்தவர்களுக்கு அரசியல் ரீதியாகவோ கட்சி ரீதியாகவோ அமைச்சர்கள் மூலமாகவோ எந்த ஒரு இடையூறும் இருக்காது" என்று தெரிவித்தார்.