தற்காலிக பணியாளர்களை நியமிக்க மின் வாரியம் அனுமதி; தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு நடவடிக்கை
அலுவலர்கள், ஊழியர்களின் உறவினர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Published : June 2, 2026 at 9:57 PM IST
சென்னை: விரைவில் தொடங்க உள்ள தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக ஒப்பந்த பணியாளர்களை நியமித்துக் கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.
கேரளம் மாநிலத்தில் இந்த வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாக வானிவை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்கு மழை தொடங்கிய ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய சூழலில் தமிழ்நாடு மின்சார வாரியம், வரும் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக 45 நாட்களுக்கு தற்காலிக பணியாளர்களை நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கி உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார வாரியம் அனைத்து மேற்பார்வைப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "2026 ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் அனைத்து விநியோக வட்டங்களிலும் நுகர்வோருக்குத் தடையற்ற மற்றும் தரமான மின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரையிலான காலத்திற்கு ஊழியர்களைப் பணியமர்த்த, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல், தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் அனைத்து விநியோக வட்டங்களிலும் நுகர்வோருக்குத் தடையற்ற மற்றும் தரமான மின் விநியோகத்தை உறுதி செய்ய ஜூன் 2 தொடங்கி ஜூலை16 ஆம் தேதி வரையில் சுமார் 45 நாட்களுக்கு கூடுதலாக பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம்.
| இதையும் படிங்க: ஜல் ஜீவன் மிஷன் 2.0 - தமிழ்நாடு அரசு, மத்திய அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து |
சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில் உள்ள ஒவ்வொரு பிரிவிற்கும் 10 நபர்கள், மலைப்பகுதிப் பிரிவுகளான நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல், போன்ற பகுதிகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் 8 நபர்கள் என பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம்.
இதேபோல், அனைத்து விநியோக வட்டங்களிலும் உள்ள எஞ்சியிருக்கும் இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவிற்கும் 6 நபர்கள் வீதம் நியமித்துக் கொள்ளலாம். கூடுதல் மனிதவளத்தை ஈடுபடுத்தும் போதும், பயன்படுத்தும் போதும் விரிவான பதிவேடுகளை, சம்பந்தப்பட்ட தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள் பராமரிக்க வேண்டும். அலுவலர்கள், ஊழியர்களின் உறவினர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தக் கூடாது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

