தமிழகத்தின் தேர்தல் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருக்கும்; தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பெருமிதம்
இந்த முறை நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்நாட்டில் 12.50 லட்சம் வாக்களர்கள் முதன்முறையாக வாக்களிக்க இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Published : February 27, 2026 at 1:14 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் நடத்தப்படும் தேர்தலானது இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருக்கும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் நேற்று சென்னைக்கு வருகை தந்தார். தமது இரண்டு நாள் பயணத்தை முடித்து, இன்று டெல்லி திரும்பும் அவர், அதற்கு முன்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வாக்காளர் பட்டியல், தேர்தல் முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
குறிப்பாக, தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தல், இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருக்கும் .அந்த அளவுக்கு தேர்தலை நடத்த சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியவற்றின் முக்கிய அம்சங்கள்:
- சட்டமன்ற தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் சட்டத்துக்கு உட்பட்டும் நடத்தப்படும்.
- வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்றுபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
- தேர்தல் அதிகாரிகள் எந்தவித அச்சமுமின்றி சுதந்திரமாக செயல்படலாம்.
- அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
- வாக்குச்சாவடிகளுக்குள் செல்ஃபோன்களுக்கு அனுமதி இல்லை. அவற்றை பாதுகாப்பாக வைக்க தனி இடம் ஒதுக்கப்படும்.
- 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரங்கள் பதிவேற்றப்படும்.
- பொய் செய்திகள் பரவுவதை தடுக்க சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழ்நாட்டில் மொத்தம் 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. வாக்குப்பதிவு முடிந்த 72 மணி நேரத்தில் அனைத்து தகவல்களும் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
- வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ் இறந்தவர்கள், இடம் மாறியவர்களின் வாக்குகளே பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளன.
- இந்த முறை நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்நாட்டில் 12.50 லட்சம் வாக்களர்கள் முதன்முறையாக வாக்களிக்க இருக்கின்றனர்.
- அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படும்.
- வாக்குப்பதிவு இயந்திரங்களில் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வண்ணப்படங்கள் இடம்பெறும்.
- அனைத்து வாக்குச்சாவடிகளும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும்.
- கடைசி 2 சுற்றுகள் இருக்கும்போதே தபால் வாக்குகள் எண்ணப்படும்.
- பதிவான வாக்குகளில் வித்தியாசம் என புகார் எழுந்தால் உடனடியாக விவிபேட் வாக்குகள் எண்ணப்படும்.
இவ்வாறு தமிழகத்தின் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் விளக்கினார். மேலும், தமிழக வாக்காளர்களுக்கு ஞானேஷ்குமார் தமிழில் பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, கடந்த நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 6.41 கோடியாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 5.67 கோடியாக குறைந்திருக்கிறது. இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2.77 கோடியாகவும், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2.89 கோடியாகவும், மூன்றாம் பாலினத்தவர் 7,617 பேரும் உள்ளனர்.
மேலும், பொதுமக்கள் மாவட்ட தொடர்பு மையங்களை "1950" என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 1800-4252-1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிலும் தகவல்களை பெறலாம் என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

