முகமூடி அணிந்து பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல்: 8 பேர் அதிரடி கைது
திருமணத்திற்கு பேனர் வைத்த போது ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது போலீஸ் விசாரணை தெரியவந்துள்ளது.

Published : May 30, 2026 at 3:43 PM IST
தென்காசி: தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோயில் தெருவில் இளைஞர் இருவருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு மணமகன் வீடு அருகே பேனர் வைத்த போது, அங்கு மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஊர் பெரியவர்கள் சேர்ந்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் திருமணம் நேற்று காலை நடைபெற்ற நிலையில், மாலையில் 3 இரு சக்கர வாகனங்களில் முகமூடி அணிந்த வந்த 8 பேர் கொண்ட கும்பல் கையில் அரிவாள்களுடன் திருமண வீட்டுக்குள் புகுந்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு கூடியிருந்தவர்களை சரமாரியாக அந்த கும்பல் வெட்டியது.
இந்த சம்பவத்தில் நெட்டூரை சேர்ந்த ரமேஷ் (49), அவரது மகன் அருள் மாறன் (23), கணேசன் மகன் சந்தோஷ் குமார் (21), கபிரியேல் மகன் ராயப்பன் (18), ஆய்க்குடி அருகே ஆனந்தபுரத்தை சேர்ந்த சேகர் மகன் ராம்குமார் (20) மற்றும் திருமணத்திற்கு மேளம் அடிக்க வந்த சாம்பவர் வடகரையை சேர்ந்த பரமசிவன் மகன் மாடசாமி (19) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அப்போதும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் தெருவோரம் நிறுத்தப்பட்டிருந்த கார், இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதோடு அங்கிருந்த கடையையும் சூறையாடிவிட்டு தப்பிச் சென்றது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த போது, அதில் மூன்று சிறுவர்கள் உள்பட 8 பேர் கும்பல் நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளில் வந்து சென்றது தெரிய வந்தது.
இதனிடையே படுகாயமடைந்தவர்களில் ராயப்பன், அருண் மாறன், ரமேஷ், ராம்குமார் ஆகிய 4 பேரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் நள்ளிரவில் ஆலங்குளம் - ரெட்டியார்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.
நெல்லையிலும் தாக்குதல் நடத்திய அதே கும்பல்
இதனிடையே திருநெல்வேலி அருகே மானூரை அடுத்த தெற்குப்பட்டி கிராமத்திற்குள் புகுந்த அதே கும்பல் அப்பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (35), முபாரக் (30) ஆகியோரை வெட்டி விட்டு தப்பி சென்றது. அவர்களும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒரே நாள் இரவில் 8 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பிரசன்னகுமார் (நெல்லை), அசோக்குமார் (தென்காசி) ஆகியோர் மேற்பார்வையில் முகமூடி கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
அந்த தனிப்படை தேடுதல் வேட்டையில், நேற்று நள்ளிரவில் சுத்தமல்லி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கல்லூர் பகுதியில் வைத்து நெட்டூரை சேர்ந்த அர்ச்சுனன் மகன் இசக்கிமுத்து (19) மற்றும் 16 வயதுடைய 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இன்று அதிகாலையில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
தாக்குதலுக்கு காரணம் என்ன?
விசாரணையில், நெட்டூரில் வடக்கு பஸ் நிறுத்தம் பகுதியில் பட்டியலின இளைஞரின் திருமணத்தை முன்னிட்டு பேனர் வைத்துள்ளனர். இதற்கு மற்றொரு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் பேனர் வைத்தவர்களுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், நேற்று மாலை கஞ்சா போதையில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் பேனரில் சாதியை வெளிப்படுத்தும் வசனங்களோ, அடையாளங்களோ இல்லாத நிலையில், போதையில் கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் கூட நாங்குநேரியில் இதே போன்று ஒன்பது பேர் கொண்ட கும்பல் போதையில் கண்மூடித்தனமாக சாலையில் சென்றவர்களை வெட்டி சாய்த்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

