ETV Bharat / state

'பீகார் தேர்தலில் பாஜக கூட்டணியின் அமோக வெற்றிக்கு இதுதான் காரணமாம் - எடப்பாடி பழனிசாமி அசத்தல் விளக்கம்

தேர்தல் ஆணையம் கண்காணித்து வாக்காளர் பட்டியலில் உண்மையான வாக்காளர்களை மட்டுமே இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எஸ்ஐஆர் பணியில் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்பதால் திமுக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழப்பம் ஏற்படுத்தி வருகிறது.

செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : November 14, 2025 at 8:09 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சேலம்: எஸ்ஐஆர் மூலம் உண்மையான வாக்காளர்கள் தேர்வு செய்யப்பட்டதால் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளதாக அதிமுக பொதுக் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று சேலம் வந்தடைந்தார். சேலம் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.

எஸ்ஐஆர் பணியில் குளறுபடி உள்ளதாக இண்டியா கூட்டணி கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்தன. எஸ்ஐஆர் பணி மூலம் போலி வாக்காளர்களை கண்டறிந்து அவர்களை நீக்கி உண்மையான வாக்காளர்களை பட்டியலில் இடம் பெற செய்யும் பணியை அதிமுக வரவேற்கிறது.

சென்னையில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 50,000 போலி வாக்காளர்கள் உள்ளனர். இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் நகர பகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் இறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை செய்து திமுக வெற்றி பெற முயற்சி செய்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், பகுதிதோறும் எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலும் கல்வி அறிவு குறைவானவர்களாக உள்ளனர்.

அவர்களை திமுக அரசு பணியில் நியமித்துள்ளதால் பொதுமக்களுக்கு எஸ்.ஐ.ஆர் குறித்த விளக்கங்களை எடுத்துக் கூற முடியவில்லை. மேலும் இந்த பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுடன் அந்தந்த பகுதி திமுக தொண்டர்கள் உடன் சென்று வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்ய முயற்சி செய்து வருகின்றனர். இதை நாங்கள் புகைப்படம் எடுத்துள்ளோம்," என்றார்.

மேலும் அவர் கூறும்போது, "தேர்தல் ஆணையம் கண்காணித்து வாக்காளர் பட்டியலில் உண்மையான வாக்காளர்களை மட்டுமே இடம்பெற செய்ய வேண்டும். அதற்கான துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். எஸ்ஐஆர் பணியில் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்பதால் திமுக அதை எதிர்த்து கருத்து தெரிவித்து குழப்பம் ஏற்படுத்தி வருகிறது.

மின்சார வாரியம் மூலம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த உள்ளனர். அதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனங்களிடம் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக அரசு முப்பதாயிரம் கோடி அளவில் ஊழல் செய்ய உள்ளது. இதுதொடர்பாக உடனே நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து ஊழலை தடுப்போம்.

இதையும் படிங்க: ‘SIR மூலம் இந்திய குடிமகன் தான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம்’ - மு.க.ஸ்டாலின் வேதனை!

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தொகுதியில் மட்டும் வாக்காளர் பட்டியலில் சுமார் 5000 இறந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதை தான் எஸ்ஐஆர் மூலம் தேர்தல் ஆணையம் சரி செய்து வருகிறது. எனவே, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.