பினராயி விஜயன் வீடு உட்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பினராயி விஜயன் இல்லத்தில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published : May 27, 2026 at 1:01 PM IST
திருவனந்தபுரம்: கேரளம் மாநிலத்தின் தற்போதையை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பினராயி விஜயனின் வீடு உட்பட பன்னிரண்டு இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் நடந்த கேரளம் மாநில சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி தோல்வியடைந்து, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைந்தது. 2016 முதல் 2026 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வகித்த பினராயி விஜயன், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், 2018-19 காலகட்டத்தில், பினராயி விஜயனின் மகள் வீணா-வுக்கு சொந்தமான எக்ஸாலாஜிக் (Exalogic) நிறுவனத்துக்கு, கொச்சினை மையமாகக் கொண்டு இயங்கும் 'கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட்' (Cochin Minerals and Rutile Limited) என்ற கனிவள நிறுவனம் ரூ. 1.72 கோடி பணப் பரிமாற்றம் செய்தது.
எந்தவொரு சேவைக்கான தொடர்பும் இரு நிறுவனங்களுக்கும் இடையே இல்லாத நிலையில் இந்த பணிப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பது சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2024 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

இந்த விவகாரத்தில், வீணா மட்டுமல்லாது அவருடைய கணவரும், முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சருமான முகமது ரியாஸ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இந்த அதிரடிச் சோதனையை அமலாக்கத்துறை தொடங்கியுள்ளது. இதன் அடிப்படையில் திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வாடகை வீடு உட்பட மொத்தமாக 12 இடங்களில் அமலாக்கத்துறையினரின் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
தற்போதைய சோதனையை தொடர்ந்து, விரைவில் அடுத்தகட்ட விசாரணைக்காக வீணா விஜயனை டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அழைக்கும் வகையிலான சம்மன் அனுப்பப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
#WATCH | Keralam: In protest against the Enforcement Directorate (ED) raid at the residences of former Chief Minister and present LoP Pinarayi Vijayan, CPI(M) workers agitate outside his residence in Kannur. pic.twitter.com/c5gc6rXMu9
— ANI (@ANI) May 27, 2026
பினராயி விஜயன் இல்லம் முன் குவித்த மார்க்சிஸ்ட் தொண்டர்கள்
இதனிடையே, திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் வசிக்கும் வாடகை இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
Strongly condemn the Enforcement Directorate raids directed against former Kerala Chief Minister Com. @pinarayivijayan.
— M.K.Stalin (@mkstalin) May 27, 2026
Such actions once again raise serious concerns over the growing pattern of central agencies being weaponised against Opposition leaders.
Incidentally, this…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், தற்போதைய கேரள சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் இல்லத்தில் நடைபெற்று வரும் அமலாக்கத் துறை சோதனைக்கு திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய முகமைகள் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்து வருவது குறித்த தீவிரமான கவலைகளை, இத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் ஒருமுறை எழுப்புகின்றன.
தற்செயலாக, "பினராயி விஜயன் ஏன் இன்னும் பாஜக-வின் தாக்குதலுக்கு ஆளாகவில்லை?" என்று மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பி வந்த சில காங்கிரஸ் தலைவர்கள் முன் வைத்த பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளின் உள்ளீடற்ற தன்மையையும் இது அம்பலப்படுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

