ETV Bharat / state

சென்னையில் அமெரிக்க பள்ளியை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

அமெரிக்கப் பள்ளியை முற்றுகையிட விடாமல் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், தரமணி பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

வெனிசுலா நாட்டு அதிபர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அமெரிக்கப் பள்ளியை முற்றுகையிட முயன்ற நபர்கள்
வெனிசுலா நாட்டு அதிபர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அமெரிக்கப் பள்ளியை முற்றுகையிட முயன்றவர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 6, 2026 at 7:32 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தரமணியில் உள்ள அமெரிக்கப் பள்ளியை முற்றுகையிட முயன்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், அதற்கு அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். இந்நிலையில், ஜனவரி 3 ஆம் தேதி வெனிசுலா நாட்டின் தலைநகர் காரகஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் இருவரையும் அமெரிக்கா சிறை பிடித்துச் சென்றது.

தற்போது, நிகோலஸ் மதுரோ அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஆர்.புரோக்லின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், அந்நாட்டில் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸ் பதவியேற்றுள்ளார். தற்போது, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வெனிசுலா அதிபர் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை தரமணியில் உள்ள அமெரிக்கன் சர்வதேசப் பள்ளி (American International School) முன்பாக முற்றுகை போராட்டம் நடத்த இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

அதன்படி, நிகோலஸ் மதுரோ கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் , இன்று (ஜன.6) 50-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளி முன் குவிந்தனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர், ‘அலுவலகத்தை முற்றுகையிட்ட வந்தவர்கள் உடனடியாக கலைந்து செல்ல வேண்டும், இல்லையெனில் கைது செய்வோம்’ என எச்சரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்போம்... வீரபாண்டியன் பேட்டி

இதனால், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. ஒரு கட்டத்திற்கு மேல், பள்ளி அலுவலகம் முன்பு கூடியிருந்தவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார், வேனில் ஏற்றி சென்றனர்.

இதற்கிடையே, சிலர் அமெரிக்க நாட்டுக் கொடியை தீயிட்டுக் கொளுத்த முயன்றனர். அதனைக் கண்ட போலீசார், உடனடியாக அமெரிக்கக் கொடியை பிடுங்கிச் சென்றனர்.

மேலும், அமெரிக்கப் பள்ளியை முற்றுகையிட விடாமல் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) நிர்வாகிகள் மற்றும் பெண்கள், தரமணி பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சாலையில் அமர்ந்து முழக்கமிட்ட போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய போலீசார், பெண்கள் என்றும் பாராமல் அனைவரையும் கைது செய்தனர். இதனால், தரமணியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.