ETV Bharat / state

மூப்பனார், விஜயகாந்த், வைகோவால் முடியாததை விஜய் செய்துவிட்டார் - துரை வைகோ

10 ஆண்டுகளுக்கு மேலாக திமுக கூட்டணியில் தொடர்ந்து வரும் நிலையில், அக்கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மேலும் தொண்டர்களின் மனக்குமுறலை தான் நான் தெரிவித்தேன் என துரை வைகோ தெரிவித்தார்.

துரை வைகோ
துரை வைகோ (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 4, 2026 at 2:17 PM IST

2 Min Read
Choose ETV Bharat

கோயம்புத்தூர்: மூப்பனார், வைகோ, விஜயகாந்த் போன்ற தலைவர்கள் கொண்டு வராத மாற்றத்தை விஜய் கொண்டு வந்துள்ளார் என துரை வைகோ கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் மதிமுக முதன்மை செயலாளரும், எம்.பி.யுமான துரை வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னை மின்வாரிய அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் தொலைந்திருப்பது குறித்த கேள்விக்கு, ”அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எதனால் இது திருடப்பட்டது என்ற காரணத்தையும் காவல் துறை கண்டறிய வேண்டும்” என வலியுறுத்தினார்.

பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து பேசுகையில், ”தேர்தலில் வாக்குறுதி அளித்தது உண்மை தான். ஆனால் ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்பு இருக்கும் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, சிறுகுறு விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்துள்ளனர். அடுத்து வரும் காலகட்டத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய முயற்சி எடுப்பதாக அரசு தெரிவித்துள்ளது” என கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ (ETV Bharat Tamil Nadu)

தவெக அரசு குறித்து கேட்ட போது, “தவெக ஆளுங்கட்சியாக உள்ளது. பிரதான எதிர்க்கட்சியாக திமுகவை தான் பார்க்கின்றனர். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இந்த ஆட்சி மீது குற்றச்சாட்டு வைக்கின்றனர். புதிய அரசுக்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். அமைச்சர்களில் செங்கோட்டையனை தவிர மற்றவர்கள் அனுபவம் இல்லாமல் வந்தவர்கள். இப்போது அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் என அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் , இவர்கள் வந்த பின்னர் மாற்றங்கள் வருவதற்கு கால அவகாசம் தேவை, உடனே செய்வதற்கு இது மேஜிக் கிடையாது” எனவும் தெரிவித்தார்.

பிற கட்சிகளை பற்றி முதலமைச்சர் விஜய் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, “காலப்போக்கில் அவரது பேச்சை மாற்றிக் கொள்வார். அரசியலுக்கு வந்து மூன்று ஆண்டுகள் தான் இருக்கும். பத்திரிக்கையாளர்கள் முதல் அனைவரும் கண்டனம் தெரிவிக்கும் போது, இது போன்ற விஷயங்களை எதிர்காலத்தில் தவிர்ப்பார்” எனவும் தெரிவித்தார்.

அரசுக்கு ஆதரவாக மதிமுக பேசும் போது விமர்சிக்கப்படுவது குறித்த கேள்விக்கு, ”திமுக ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளது. எங்களை பொறுத்தவரை ஆறு முதல் 12 மாதம் அவகாசம் கொடுப்போம். அனைத்திலும், குற்றம் கண்டுபிடித்தால், அது சரியாக இருக்காது. ஆறு மாதம் முதல் ஒரு வருடம் கழித்து இதே நிலை தொடர்ந்தால் மதிமுக கண்டனத்தை தெரிவிக்கும்” என தெரிவித்தார்.

திருச்சியில் திமுக குறித்து பேசியது பற்றிய கேள்விக்கு, “திருச்சியில் பேசும் போது, திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிஷ்டவசம் என்று சொன்னது உண்மை தான். ஒரு கட்சியின் கொடி, சின்னம் தான் அடிப்படை அடையாளங்கள். ஒரு இயக்கம் தன்னுடைய சின்னத்தில் இல்லாமல் வேறு சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் அதன் தனித்துவத்தை இழக்கிறது. சின்னம் மட்டும் பிரச்சனை கிடையாது. இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடும் போது நிறைய பிரச்சினைகள் உள்ளன.

10 ஆண்டுகளுக்கு மேலாக திமுக கூட்டணியில் தொடர்ந்து வரும் நிலையில், அக்கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மேலும் தொண்டர்களின் மனக்குமுறலை தான் நான் தெரிவித்தேன். ஒரு இயக்கம் மற்றொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக் கூடாது, எங்கள் தலைமை விரும்புகின்றதோ, இல்லையோ என்னுடைய முக்கியமான கோரிக்கையாக இது இருக்கும். நான் துரதிஷ்டம் என சொன்னதை, தவெகவிற்கு ஆதரவு கொடுத்திருப்போம் என கூறியதாக நினைத்து, அதைக் கொச்சைப்படுத்தக் கூடாது” எனக் கூறினார்.

இதையும் படிங்க: முதல்வராக விஜய் பணியாற்றுகிறாரா? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

தொடர்ந்து அண்ணாமலைக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த துரை வைகோ, “தமிழ்நாட்டில் நல்லதொரு இயக்கமாக வாழ்த்துகிறேன்” எனவும் கூறினார். மேலும் பேசுகையில், “ அரசியலுக்கு அப்பாற்பட்டு மூப்பனார், வைகோ, விஜயகாந்த் ஆகியோர் கொண்டு வர முடியாத மாற்றத்தை தவெக கொண்டு வந்துள்ளது. ஜாதி, மதம், பண அரசியலை கடந்து ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் சில கட்சி தொண்டர்கள் தவெகவிற்கு செல்கின்றனர், அதனை தவறு என சொல்ல முடியாது” என்றார்.