டிஜிட்டல் வருகையால் நலிவடைந்த சுவர் ஓவியங்கள்; வருமானமின்றி தவிக்கும் தொழிலாளர்கள்
சுவர் ஓவிய கலைஞர்களின் பணி அவல நிலையில் உள்ளதால், அவர்கள் கொத்தனார் போன்ற பணிகளுக்கு சென்றுவிட்டதாக நெல்லை அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மூத்த சுவர் ஓவியக் கலைஞர் விஜயகுமார் வருத்தத்துடன் கூறினார்

Published : February 28, 2026 at 7:11 PM IST
இரா.வீரமணிகண்டன்
மக்கள் மத்தியில் ஆண்ட்ராய்டு செல்போன் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், படிப்படியாக சுவர் விளம்பரங்களின் தேவையும் அரசியல் கட்சிகளிடம் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா விரைவில் நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி பேசுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, பிரச்சாரம் என பம்பரமாக சுழன்று வருகின்றனர். இதனால் டீக்கடை பெஞ்சு முதல் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் அரசியல்வாதிகளின் ஒவ்வொரு நகர்வுகள் குறித்து விவாதம் செய்து வருகின்றனர். அரசியலை விரும்பும் மக்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அரசியல் செய்திகளை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.
வேட்பாளர்களை அடையாளம் காட்டிய சுவர் விளம்பரங்கள்
அந்த வகையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொழில்நுட்ப பயன்பாடு அதிகம் இல்லாத காலத்தில் தேர்தல் தொடர்பான செய்திகளை செய்தித்தாள்கள் மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் பெரும்பாலான மக்கள் அறிந்து கொண்டனர். அவ்வாறு செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கம் இல்லாத மக்களுக்கு ஒரு காலத்தில் சுவர் விளம்பரங்கள் தான் அரசியல் தகவல் பலகையாக கண்ணிற்கு தெரிந்தது. தேர்தல் நெருங்கி விட்டாலே மக்கள் திரும்பும் இடங்களில் எல்லாம் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் மற்றும் வேட்பாளரின் பெயர்கள் சுவரில் எழுதப்பட்டிருக்கும்.
சுவர் விளம்பரங்களுக்கு போட்டா போட்டி
சுவர் விளம்பரங்களை பார்த்து தான் கட்சிகளின் கூட்டணி முடிவு குறித்தும் தங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை குறித்தும் பலர் அறிந்து கொண்டனர். இரட்டை இலை உதய சூரியன், கை, தாமரை, முரசு, மாம்பழம் என பல முக்கிய சின்னங்களை மக்கள் மனதில் பதியச் செய்ததில் சுவர் விளம்பரங்களுக்கு அதிக பங்கு உண்டு. குறிப்பாக முக்கிய சாலை ஓரம் உள்ள சுவரை பதிவு செய்வதில் அரசியல் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும். அதனால் தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரிடம் பணத்தை கொடுத்து சுவரை முன்பதிவு செய்வார்கள். அவ்வளவு ஏன்? சுவருக்காக பல அரசியல் சண்டைகளே நடந்துள்ளது, சில சினிமா படங்களில் கூட இந்த சுவர் கதையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் தற்போது நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் சுவர் விளம்பரங்களுக்கு மவுசு குறைந்து விட்டது. மக்கள் மத்தியில் ஆண்ட்ராய்டு செல்போன் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், படிப்படியாக சுவர் விளம்பரங்களின் தேவையும் அரசியல் கட்சிகளிடம் குறைந்தது. தற்போது அரசியல் கள நிலவரங்களையும், தொகுதி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி குறித்தும் நொடிப் பொழுதில் மொபைலில் மக்கள் தெரிந்து கொள்ள முடியும் சுவரைப் பார்த்து தான் தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் தற்போது மக்களிடம் ஏற்படவில்லை. சுவர் விளம்பரத்தை நம்பியுள்ள ஓவிய கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுவர் ஓவியத் தொழில் பாதிப்பு
இது ஒருபுறம் இருக்க டிஜிட்டல் பிளக்ஸ் பேனர்களின் ஆதிக்கத்தால், அவர்களின் தொழில் மேலும் நலிவடைந்துள்ளது. தற்போது அதிகளவு பணம் செலவு செய்து பெயிண்ட் மூலம் சுவர் விளம்பரம் செய்வதை விட, குறைந்த விலையில் டிஜிட்டல் பிளக்ஸ் பேனர் அடித்து சுவற்றில் ஒட்டும் பழக்கம் அரசியல் கட்சிகளிடம் அதிகரித்துள்ளது அதேபோல் பெயரளவுக்கு வேட்பாளரின் பெயர், கட்சியின் பெயர், சின்னங்களின் பெயர்களை மட்டும் பெயிண்டில் எழுதி விட்டு, தலைவர்களின் உருவப்படங்களை பெயிண்டில் ஓவியமாக வரையாமல் உருவப் படங்களை மட்டும் பிளக்ஸ் பேனராக அடித்து சுவற்றில் ஒட்டுகின்றனர்.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தற்போதே தேர்தல் களம் களைகட்ட தொடங்கியுள்ளது. ஆங்காங்கே அரசியல் கட்சி நிர்வாகிகள் சுவர் விளம்பரங்கள் எழுத தொடங்கியுள்ளனர். ஆனால் நாம் ஏற்கனவே கூறியபடி பல இடங்களில் பெயர்கள் மட்டுமே பெயிண்டில் எழுதப்பட்டு, தலைவர்களின் உருவங்கள் டிஜிட்டல் பிளக்ஸ் பேனரால் வைக்கப்பட்டுள்ளது.
நலிவடைந்து வரும் சுவர் ஓவியர்கள் பணி
சுவர் ஓவிய கலைஞர்களின் பணி அவல நிலையில் உள்ளதால், அவர்கள் கொத்தனார், ஜவுளிக்கடை, மளிகைக் கடை வேலைகளுக்கு சென்றுவிட்டதாக நெல்லை அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மூத்த சுவர் ஓவியக் கலைஞர் விஜயகுமார் (70) வருத்தத்துடன் கூறுகிறார். அவர் பேசுகையில், ”நான் கடந்த 55 ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். சுவர் ஓவியங்களுக்கு முன்பு இருந்த மவுசு தற்போது இல்லை, எங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தலைவர்களின் உருவப்படங்களை பெயிண்டால் வரைவதை தவிர்த்து, பிளக்ஸ் பேனர் அடித்து வைக்கும்படி கூறுகின்றனர்.
பெயிண்டால் படங்களை வரையும் போது அதிக நேரம் செலவாகும். இதனால் பெயிண்ட் செலவு மற்றும் கூலி ஆட்கள் செலவு அதிகரிக்கிறது, குறிப்பாக ஒரு சுவரில் பெயிண்ட் மூலம் தலைவர்களின் படங்களை வரைந்து எழுதி முடிக்க 3000 ரூபாய் வரை செலவாகும். அதேசமயம் வெறும் 500 ரூபாயில் பிளக்ஸ் பேனர் அடித்து வைத்தால் அவர்களுக்கு செலவு மிச்சம் என்பதால் பெரும்பாலான கட்சிகள் அதையே விரும்புகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு நான் கிராமங்களில் சுவர் விளம்பரம் எழுதச் செல்லும் போது, மக்கள் எங்களை கண்டதும் சுவர் அருகே வந்து ஆர்வமுடன் கூடி நிற்பார்கள். இங்கு யார் போட்டியிடுகிறார்கள் என எங்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். ஆனால் தற்போது கையில் செல்போன் வந்துவிட்டதால் வேட்பாளர் அறிவித்தால், அடுத்த சில நொடிகளில் செல்போன் மூலம் மக்கள் அதை தெரிந்து கொள்கின்றனர்.
எனவே எங்கள் தொழில் நலிவடைந்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதால், சுவர் விளம்பரம் செய்ய அரசியல் கட்சிகள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. முன்பெல்லாம் தேர்தலுக்கு இரண்டு மதங்களுக்கு முன்பே பிஸியாக இருப்போம். ஆனால் இப்போது 10 நாட்கள் வரை தான் அதிகபட்சம் வேலை கிடைக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் சுவர் விளம்பரம் வரையும் ஓவிய கலைஞர்கள் அபூர்வமாகத்தான் இருப்பார்கள்” என்றார்.
இதுகுறித்து ஓவியக் கலைஞர் ஆறுமுகம் நம்மிடம் கூறுகையில், நான் கடந்த 1990ஆம் ஆண்டு இந்த துறைக்கு வந்தேன். 2000க்கு முன்பு வரை ஓவியத் தொழில் நன்றாக இருந்தது. டிஜிட்டல் ஆதிக்கம் என்று தொடங்கியதோ அன்றிலிருந்து, ஓவியர்களின் வாழ்க்கை பாதிக்க தொடங்கியது. முன்பு சின்னம் வரைவதற்கு இரவு முழுவதும் ஊர், ஊராக கட்சிக்காரர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த பழக்கம் தற்போது குறைந்துவிட்டது, காரணம் சமூக வலைதளங்களில் தான் கட்சிகாரர்கள் தங்கள் எண்ணங்களையும், சின்னங்களையும் வெளிப்படுத்துகின்றனர். நாங்கள் சென்று ஓவியம் குறித்து கேட்டால் கூட கட்சிக்காரர்கள் அதற்கு இப்போது என்ன அவசியம்? அதான் மக்களுக்கு எல்லாம் தெரியுமே என்று கூறுகிறார்கள்.
மூன்று தேர்தலுக்கு முன்பு வரை சின்னங்கள் வரைவது போன்ற பணிகள் விறுவிறுப்பாக இருந்தது. தற்போது அரசு எங்களுக்கு மறுவாழ்வு தர வேண்டும். நான் பள்ளி முடித்த உடன், சிறந்த ஓவியராகி சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு தான் இத்துறையை தேர்வு செய்தேன். ஆனால் தற்போது டிஜிட்டல் ஆதிக்கத்தால் கிடைக்கும் வேலையை செய்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டேன்.
| இதையும் படிங்க: 'மாஞ்சோலை தொழிலாளர்கள் 722 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் மிஸ்சிங்' - மீண்டும் நடந்த தவறு; தீர்வு என்ன? |
எனவே கோயில்களுக்கு பெயிண்ட் அடிப்பது போன்ற பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறேன். மேலும் பிளக்ஸ் பேனர் போன்று பென்சில் மூலம் பெயிண்ட் அடிக்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது. அதாவது வேட்பாளரின் பெயர், சின்னங்களை பிளாஸ்டிக் பேப்பரில் சாயம் பூசி, அதனை சுவற்றில் ஒட்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஓவியர்கள் தான் சுவரில் சின்ன வரைய வேண்டும் என்ற கட்டாயம் தற்போது இல்லாமல் போய்விட்டது என வேதனையோடு தெரிவித்தார். தேர்தல் என்றாலே மக்களுக்கு சுவர் விளம்பரங்கள் தான் பாரம்பரிய அரசியல் தகவல் பரிமாற்றமாக இருந்தது. டிஜிட்டல் யுகத்தில் பல பாரம்பரிய தொழில்கள் அழிந்து வரும் நிலையில், சுவர் ஓவியத் தொழில் நலிவடைந்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

