’டோரா...’ இது கார்ட்டூன் கதாபாத்திரம் அல்ல, தமிழ்நாடு மீனவர்களை அச்சுறுத்தும் 'பூதம்'
தமிழ்நாடு மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை அமைச்சர் ராமலிங்கம் கூறியுள்ளார்.

Published : March 3, 2026 at 11:00 PM IST
- BY எஸ்.சீனிவாசன்
விடிந்தால் ’கிறிஸ்துமஸ்’ பண்டிகை என்பதால் அன்று மீன் பிடிக்க சென்றோம். ஆனால் கடந்த வருடம் எங்களுக்கு ’கருப்பு கிறிதுஸ்மஸ்’ ஆக அமைந்தது என கண்ணீரோடு கூறுகிறார் ராமேஸ்வரம் மீனவர் கோர்பசேவ்.
'டோரா' இந்த வார்த்தையை கேட்டால் குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் கேரக்டர் தான் நமது நினைவுக்கு வரும். இந்த பெயரை கேட்டாலே குழந்தைகளிடையே குதூகலம் ஏற்படுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் 'டோரா' என்ற வார்த்தையை கேட்டாலே தமிழ்நாடு மீனவர்களின் அடிவயிற்றில் அச்சத் தீ உருவாகிறது. காரணம், இலங்கை கடற்படையில் உள்ள படகு ஒன்றின் பெயர் தான் 'டோரா'. தமிழ்நாடு மீனவர்களை எல்லை தாண்டி வருவதாகக் கூறி, சிறை பிடிப்பதற்கு இலங்கை கடற்படை பயன்படுத்தப்படும் இந்த படகு அதிவேகமாக செல்லக் கூடியது.
தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி வருவதாக தெரிந்தால், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், ரேடார் மூலம் கண்காணித்து அடுத்த சில நிமிடங்களிலே டோரா படகு விரைந்து வந்துவிடும். இந்த படகையும், அதன் பெயரையும் கேட்டால் தமிழ்நாடு மீனவர்களின் கண்களில் பயம் தெரிவதை நாம் கண் கூட பார்க்க முடிகிறது.
கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவிற்காக ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளர் குழுவினர் ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவிற்கு படகில் பயணம் செய்தோம். அப்போது மீன் பிடிக்கச் சென்று, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறையில் அனுபவித்த கொடுமைகள் குறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கண்ணீர் மல்க பேசினார்கள்.
அப்போது படகில் இருந்த மீனவர் கோர்பசேவ் என்பவரிடம் மீன்பிடி தொழில் தொடர்பாக பேச்சுக் கொடுத்தோம். பல்வேறு அனுபவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டே வந்தார். இந்திய எல்லையை கடந்து இலங்கை கடற்பரப்பில் நாம் பயணித்த படகு நுழைந்தவுடன், திடீரென அவரது முகம் மாறியது. அப்போது அருகில் சென்று கொண்டிருந்த இலங்கை கடற்படையின் படகை காட்டிய மீனவர் கோர்பசேவ், "இது தான் ’டோரா’. ராமேஸ்வரம் மீனவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடு மீனவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்துவது இந்த படகு தான்" என்றார்.
பார்பதற்கு கடற்படையில் உள்ள சாதாரண படகு போல் தான் டோரா இருந்தாலும், அதன் கொடூரத்தை விவரிக்கத் தொடங்கினார் மீனவர் கோர்பசேவ். அப்போது அவர், "மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் செல்லும் போது ஜிபிஎஸ் கோளாறு ஏற்பட்டு, தவறுதலாக இலங்கை எல்லைக்குள் செல்லும் நிலை ஏற்படும். அவ்வாறு செல்லும் போது கண்ணிமைக்கும் நேரத்தில் எங்களை பிடித்துச் செல்லும் படகு இது. இதில் வருபவர்கள் எங்களை பார்த்தவுடன் கைது செய்து, படகில் ஏற்றி கொண்டு செல்வார்கள். அவ்வாறு கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற போது என்னையும் சேர்த்து 12 பேரை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அவர்களது படகில் ஏற்றி எங்களின் கைகளை கட்டி அடிக்கத் தொடங்கினர். பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். நீதிமன்றம் செல்லும் போது ஏதோ பயங்கரவாதிகளை போல், எங்களுடைய கைகளை சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்றனர். அப்போது எங்களுடைய உயிரே போய்விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. இலங்கை சிறையில் இருக்கும் ஒவ்வொரு நாளும் மிகக் கொடுமையானது" என்றார்.

தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்பான பிரச்சனை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ’பாக் ஜலசந்தி’ பகுதியில் மீன்பிடி உரிமை தொடர்பான சர்ச்சை காரணமாக, இலங்கை எல்லைக்கு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாடு மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். நடப்பு 2026 ஆம் ஆண்டு மட்டும் ஜனவரி முதல் பிப்ரவரி இறுதி வரை அதாவது 2 மாதங்களில் மட்டும் 78 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல் கைது சம்பவம் ஜனவரி 3-ந் தேதி அரங்கேறியது. அப்போது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து ஜனவரி 13-ந் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரும், பிப்ரவரி 16 அன்று நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 25 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
பிப்ரவரி 19-ந் தேதி ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது நான்கு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த அதிர்ச்சியில் இருந்து பாம்பன் பகுதி மக்கள் மீள்வதற்குள் பிப்ரவரி 23 அன்று மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களின் மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து நம்மிடம் பேசிய மீனவர் கோர்பசேவ், "இலங்கை சிறையில் அடைக்கப்பட்டால் 3 வேளை உணவு என்பது கனவு தான். ஒரு நாளைக்கு ஒரு வேளையோ அல்லது இருவேளையோ மட்டுமே உணவு கொடுப்பார்கள். கஞ்சா, போதை மருந்து கடத்தியதற்காக கைது செய்யப்பட்ட வெளிநாட்டு குற்றவாளிகளுடன் நாங்களும் அடைக்கப்படுவோம். நீதிமன்றத்தில் ஒவ்வொரு முறையும் வாய்தாவின் போதும், கையில் விலங்கு போட்டு தான் அழைத்து செல்வார்கள். வழக்கு விசாரணை முடிந்து எங்களுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த போது அதனை கட்டி விட்டு வந்தோம்.
நீதிமன்றம் அபராதம் விதித்தால் குறிப்பிட்ட நாளுக்குள் அதனை கட்டி விட வேண்டும். இல்லையென்றால், மொட்டை அடித்து வேறு சிறைக்கு மாற்றி விடுவார்கள். நாங்கள் கைது செய்யப்பட்ட தகவலை உடனடியாக இந்திய வெளியுறவுத்துறைக்கு தெரிவித்து விடுவார்கள். பின்னர் வெளியுறவுத்துறை வழக்கறிஞர்கள் மூலம் நாங்கள் நீதிமன்றத்தில் வாதாட வேண்டும். அந்த வழக்கு முடிந்தவுடன் எங்களை மட்டும் விடுதலை செய்து விடுவார்கள். ஆனால், படகுகள் வராது.

இதே போன்று கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதே போல் எனது படகும் தற்போது அங்கு சிக்கி உள்ளது. கடந்த ஆண்டு விடிந்தால் ’கிறிஸ்துமஸ்’ பண்டிகை என்பதால் அன்று மீன் பிடிக்க சென்றோம். கிடைக்கும் பணத்தில் பண்டிகையை கொண்டாட நினைத்திருந்த எங்களுக்கு அது ’கருப்பு கிறிஸ்மஸ்’ ஆக அமைந்தது" என்கிறார் கண்ணீருடன்.
தமிழ்நாடு மீனவர்கள் கூறுவதை உறுதிப்படுத்துகின்றன, வெளியுறவு அமைச்சக புள்ளிவிவரங்கள். அதாவது, தற்போது இலங்கை சிறையில் 116 தமிழ்நாடு மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 259 படகுகள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பேசிய மீனவர் கோர்பசேவ், "மத்திய அரசு இலங்கை அரசிடம் ஒரு வார்த்தை பேசினால் உடனடியாக அந்த படகுகளை விடுவித்து விடுவார்கள், ஆனால் அவர்கள் பேச மறுக்கின்றனர். ஒவ்வொரு நாளும் கடலுக்கு செல்லும் போது திரும்பி வருவோமா? என்ற அச்சத்திலேயே சென்று வருகிறோம். ஒரு முறை மீன்பிடிக்க சென்றால், 2 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் என்பதால் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.
50 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஒரு படகை வாங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அந்த படகு இலங்கையில் சிக்கி உள்ளதால் என்னுடைய வாழ்வாதாரமே முற்றிலும் கேள்விக்குறியாகிப் போனது. அதனை மீட்டெடுப்போமா? என்பது மிகப் பெரிய சந்தேகமாக உள்ளது. இது தவிர அபராதம் என்ற பெயரில், கோடிக்கணக்கில் பணத்தை கட்ட சொன்னால் மீன்பிடி தொழிலை நம்பி உள்ள நாங்கள் எப்படி செலுத்த முடியும்?” என கேள்வி எழுப்பினார்.

கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு தொடங்கியது மீனவர்கள் கைது சம்பவங்கள். 1980-களில் இருந்து இதுவரை ஆயிரக்கணக்கான தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2022-ம் ஆண்டு 229 மீனவர்களும், 2023-ல் 220 பேரும், அதிகபட்சமாக 2024-ல் 526 மீனவர்களும், கடந்த ஆண்டு 172 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது 2022 முதல் 2025 டிசம்பர் வரை 4 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,147 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2026-ல் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, இரு நாட்டு மீனவர்களும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மீனவர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இது குறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் இலங்கை கடல் தொழில்துறை அமைச்சர் ராமலிங்கம் பேசுகையில், ”தமிழ்நாடு மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட படகுகளைத் திரும்ப ஒப்படைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. முதற்கட்டமாக மனிதாபிமான அடிப்படையில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முடிக்கப்பட்ட 28 படகுகள் விரைவில் மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. பழுது பார்க்க முடியாத நிலையில் உள்ளதை தவிர, மற்ற படகுகள் அனைத்தும் உரியவர்களிடம் கண்டிப்பாக ஒப்படைக்கப்படும்.
| இதையும் படிங்க: விஜய் அல்ல; யார் நினைத்தாலும் கச்சத்தீவை மீட்க முடியாது - இலங்கை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் |
மேலும், சுமார் 60 முதல் 70 படகுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் முடிவுக்கு வந்தவுடன் அவை நிச்சயமாகத் திரும்ப ஒப்படைக்கப்படும" என உறுதி அளித்தார்.
மேலும் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் இது தொடர்பாக சென்னையில் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்த இலங்கை அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் இலங்கை கடல் தொழில்துறை அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்தார்.

