ETV Bharat / state

கட்சியை விட்டுச் செல்பவர்களைப் பற்றி கவலை வேண்டாம் - அதிமுக நிர்வாகிகள் மத்தியில் இபிஎஸ் பேச்சு

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக தகவல் கூறுகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 4, 2026 at 9:28 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: அதிமுகவை விட்டுச் செல்பவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்; நான் பார்த்துக் கொள்கிறேன் எனவும் நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுத்தோல்வியைச் சந்தித்திருந்தது. இதைத் தொடர்ந்து அதிமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக தேர்தலில் வெற்றி பெற்றிருந்த பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, தாராபுரம் சத்தியபாமா, மதுராந்தகம் மரகதம் குமாரவேல், விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

அதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதேபோல், முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், வளர்மதி, வைகைச்செல்வன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அண்ணா தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்துள்ளனர்.

இந்த சூழலில், மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்று (ஜூலை 04) பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிச் செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மாவட்டத்தில் தற்போதைய கட்சி அமைப்பு, உறுப்பினர் சேர்க்கை, களப்பணிகள் மற்றும் எதிர்காலத் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த தேர்தல் தோல்விக்கான காரணங்கள், மாவட்ட வாரியாக ஏற்பட்ட பின்னடைவுகள், வாக்கு சதவீதம் குறைந்த பகுதிகள் உள்ளிட்டவை குறித்தும் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கும்பாபிஷேகம் நடத்துவதில் தகராறு: பெண் மீது தவெக நிர்வாகி கொலைவெறி தாக்குதல்

அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கட்சியை விட்டு விலகிச் செல்பவர்களைப் பற்றி நிர்வாகிகள் கவலைப்பட வேண்டாம்; நான் பார்த்துக் கொள்கிறேன்" எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. வரவிருக்கின்ற இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் பணிகளைத் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்றும் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல் கூறுகின்றன.