ஓசூரில் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை: திமுக நிர்வாகி போக்சோவில் கைது
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் அந்தரங்க உறுப்பில் உள்காயங்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதன் பேரில் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Published : February 28, 2026 at 5:36 PM IST
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்துள்ள ஜேசுராஜபுரம் ஊராட்சி கவுண்டன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பிரின்சி (24). திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (28), இவர்கள் இருவரும் ஓசூரில் கட்டட வேலை செய்துபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்தபின் இருவரும் கீழ்பெண்ணாந்தூர் கிராமத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்த பிரின்சி, குழந்தையுடன் தனது தாய் வீட்டுக்கு வந்து அங்கேயே வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து சூர்யா அவ்வபோது கவுண்டன் கொட்டாய் கிராமத்துக்குச் சென்று தனது குழந்தையை பார்த்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி குழந்தைக்கு வலிப்பு வந்ததாகக் கூறி பிரின்சி அவரை அஞ்செட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து குழந்தையின் தந்தை சூர்யாவிற்கு தெரிவிக்கப்படவே, தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
| இதையும் படிங்க: ஆந்திரா பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 20 பேர் உயிரிழப்பு |
புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் அந்தரங்க உறுப்பில் உள்காயங்கள் இருப்பது தெரியவந்தது.
இது சம்பந்தமாக போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பிரின்சிக்கும் ஜேசுராஜபுரம் அடுத்துள்ள கோழம்பை காடு கிராமத்தைச் சேர்ந்த அஞ்செட்டி திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரான பெரிய நாயகம் (40) என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.
பிரின்சி வீட்டில் இல்லாத நேரத்தில் பெரிய நாயகம், குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அவரிடம் தவறாக நடந்துள்ளார் என்பது போலீசாரில் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அஞ்செட்டி போலீசார், திமுக ஒன்றிய நிர்வாகி பெரிய நாயகத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

