உலக மகா திருடர்கள் சேர்ந்து பெரிய திருடரிடம் மனு கொடுத்த கதை - ஆர்.எஸ். பாரதி விமர்சனம்
இந்தியாவிலேயே அதிக ஊழல் செய்தவர் ஜெயலலிதா என கூறிய பாஜகவுடன் தான் அதிமுக கூட்டணி வைத்துள்ளது என ஆர்.எஸ். பாரதி கூறினார்.

Published : January 8, 2026 at 9:08 AM IST
சென்னை: திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாக கூறி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ரவியிடம் புகார் மனு அளிக்கப்பட்டதை ஆர்.எஸ். பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். உலக மகா திருடர்கள் அனைவரும் சேர்ந்து பெரிய திருடரிடம் மனு கொடுத்த கதை இது என அவர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் திராவிட பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "மக்களோடு மக்களாக மக்களுக்காக பயணிக்கும் இயக்கம் தான் திமுக. இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. சிறந்த முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளார். மக்களோடு நெருங்கிய தொடர்பில் இருக்கக்கூடியவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள். எனவே திமுக அரசு செய்துள்ள சாதனைகளை மக்களிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் எடுத்து சொல்ல வேண்டும்" என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுக ஆட்சியில் மக்களுக்கு தொடர்ந்து நன்மைகள் கிடைக்கின்றன. தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மீதமுள்ள வாக்குறுதிகளும் மீதமுள்ள நாட்களில் நிறைவேற்றப்படும். அரசு ஊழியர்களின் பிரச்சினை நிரந்தரமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாக ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்துள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், புகார் அளித்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அத்தனை அதிமுக முன்னாள் அமைச்சர்களும் ஊழல்வாதிகள்தான்.
உலக மகா திருடர்கள் அனைவரும் சேர்ந்து பெரிய திருடரிடம் மனு கொடுத்த கதை தான், ஆளுநரிடம் அதிமுக மனு அளித்த செய்தி" என ஆர்.எஸ். பாரதி கூறினார்.
அதிமுக - பாமக கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "அதிமுக -பாமக கூட்டணி ஏற்கனவே இருந்த கூட்டணி தானே" என்றார். மேலும் பேசிய அவர், "இந்தியாவிலேயே அதிக ஊழல் செய்தது ஜெயலலிதா தான் என மோடியும் அமித் ஷாவும் சொன்னார்கள். ஆனால் இப்போது அவர்கள் கூட்டணியில் தான் அதிமுக இருக்கிறது" என்றார்.
பின்னர், ஆட்சியில் பங்கு பற்றி பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஆர்.எஸ். பாரதி, "அவர்களின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியே பதில் சொல்லிவிட்டது. திமுகவில் இருந்தும் சரி, காங்கிரஸ் கட்சியில் இருந்தும் சரி, யார் கருத்து சொன்னாலும் அது தனிப்பட்ட கருத்து தான். ராகுல் காந்தியும் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவு தான் இறுதியான முடிவு" எனத் தெரிவித்தார்.

