விஜய் தலைமையிலான தவெக அரசை கவிழ்க்க திமுக சதி - வைகோ பகிரங்க குற்றச்சாட்டு
தவெக ஆட்சி அமைத்ததை தாங்க முடியாமல், 6 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று திமுகவினர் சொல்கிறார்கள்; ஆனால் விஜய் அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று வைகோ கூறினார்.

Published : July 6, 2026 at 6:36 PM IST
திருப்பூர்: தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசை கவிழ்க்க திமுக சதி செய்து வருகிறது என்று குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாங்கள் தவெக அரசுக்கு காவல் அரணாக, போர்க்கவசமாக இருந்து பாதுகாப்பு அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த புத்தரச்சல் பகுதியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் நிகழ்வுக்கு மதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், "நாங்கள் இதுவரை 5 மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி உள்ளோம். சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி, ஆக்ஸிஜனை உறிஞ்சி, கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகின்றன. பறவைகள், ஆடு, மாடுகள் இந்த செடி அருகே செல்வதில்லை. இந்த பேய்ச் செடி, கேரளாவில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்காது. மேகதாது அணை கட்டும் விவகாரத்தை ஊக்குவிப்பது மத்திய அரசு. தமிழகம் இதனை கண்டு கொந்தளித்து எழும். இதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சார நடைபயணத்தை மேற்கொண்டதை நான் ஆதரிக்கிறேன். கர்நாடகாவில் உள்ள ஆற்றுக்கு அணை கட்டுகிறோம் என்கிறார்கள். அப்படியென்றால், நெய்வேலி நிலக்கரி சுரங்கம் நமது என்று ஆகிவிடுமா? ஆவடி தொழிற்சாலைக்கு சொந்தம் கொண்டாட முடியுமா?
தமிழ்நாட்டில் ஆர்.வி.அர்லேகர் என்பவரை ஆளுநராக நியமித்து ஜனநாயக சித்து விளையாட்டை பாஜக நடத்தி வருகிறது. குதிரை பேரம் என வாய்க்கு வந்தபடி திமுக விமர்சிக்கிறது. எங்கள் கட்சியினரை திமுக சின்னத்தில் நிற்கவைத்து, தங்களுடன் சேர்த்துக் கொண்டதுதான் குதிரை பேரம்.
குதிரை பேரத்திற்கு வழிகாட்டியது திமுகதான். தவெக அரசு அமைந்ததை தாங்க முடியாமல், இந்த ஆட்சி 6 மாதங்களில் கவிழ்ந்து விடும் என்று திமுகவினர் சொல்கிறார்கள். ஆனால், விஜய் அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும்; அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், தவெக அரசை வீழ்த்துவதற்கு திமுக அனைத்து பகீரத முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. அதற்காக, விஜய் அரசு மீது திமுகவினர் நாளொன்றுக்கு ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.
இங்கு கட்டிங் , கரப்ஷனுக்கு முற்றுப்புள்ளி வைத்தது தவெக அரசு. ஊழலை வேருடன் பிடுங்கி எரியும் அரசாக தவெக அரசு உள்ளதால் நாங்கள் தவெகவை ஆதரிப்போம். நாங்கள் காவல் அரணாக, போர்க்கவசமாக இருந்து விஜய் அரசுக்கு முழு பாதுகாப்பு அளிப்போம்.
கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சிப்பது சரியாக இருக்காது என்பதால் தான், அப்போது நாங்கள் பேசவில்லை.
| இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக தலைவர்களுக்கு எதிரான திமுகவின் அவசர மனு - உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை |
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வந்தால் பாஜக ஆட்சியை கொண்டு வரலாம் என பகல் கனவு கண்டார்கள்; அதனை முறியடித்துள்ளோம். தவெக ஆட்சியை அகற்ற தலைகீழாக நின்று பார்க்கிறார்கள்.
முதல்வர் விஜய் ஆழ்ந்து யோசித்து ஒவ்வொன்றையும் கிரகித்து செயல்பட்டு வருகிறார். அடுத்த 6 மாதத்தில் அவர் நிபுணத்துவம் வாய்ந்தவராக திகழ்வார். இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது" என்று வைகோ தெரிவித்தார்.

