ETV Bharat / state

திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது; மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி கண்டனம்

குதிரை பேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்கவைத்து, விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரை கைது செய்து காலம் கடத்திவிடலாம் என முதலமைச்சர் நினைக்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன்
திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 3, 2026 at 3:25 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் தவெக அரசு காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் இன்று அதிரடியாக கைது செய்தனர். அவரின் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி ஆகியவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது என கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அவர், “முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது #SofaModel அரசு.

அவதூறு பேசி - பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொய் வழக்காலும் - கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆணவம் அழிவிற்கு வழி என குறிப்பிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு. தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?

இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு - முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?

அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது? வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதேபோன்று, தவெகவின் இதுபோன்ற அடக்குமுறைக்கு திமுக அடிபணியாது என குறிப்பிட்ட எம்.பி கனிமொழி, “அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை தவெக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதியில் ஆய்வுப் பணியை மேற்கொண்டிருந்தபோது அராஜகமான முறையில் அவரை கைது செய்திருக்கிறது இந்த தவெக அரசு. இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் ஒருபோதும் திமுக அடிபணியாது” என்று தெரிவித்துள்ளார்.