கொளத்தூர் தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறிய மு.க ஸ்டாலின்
"உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் என்றும் இருப்பேன்" என மு.க. ஸ்டாலின் உருக்கமாக கூறியுள்ளார்.

Published : May 5, 2026 at 10:59 PM IST
சென்னை: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று (மே 4) வெளியான நிலையில், நாளை மறு நாள் (வியாழக்கிழமை), புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக-வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (மே 5) வெளியிட்டார்.
அதில், "மு.க. ஸ்டாலின் தலைமையில், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வியாழக்கிழமை (மே 7) மாலை 5.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், 'கலைஞர் அரங்கில்' நடைபெறும். அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என கூறப்பட்டுள்ளது.

என்ன மாதிரியான ஆலோசனை நடக்கலாம்?
இந்த கூட்டத்தின்போது பல்வேறு முக்கிய ஆலோசனைகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து எதிர்காலத் திட்டங்களை வகுப்பது, கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் மக்களைக் கவரவில்லையா?, மாவட்ட மற்றும் தொகுதி வாரியாக நிர்வாகிகள் எந்தளவுக்குப் பணியாற்றினார்கள், எங்கெல்லாம் சுணக்கம் ஏற்பட்டது? மற்றும் கூட்டணி அமைத்ததில் ஏற்பட்ட தவறுகள் அல்லது கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு இன்மை குறித்து ஆலோசிப்பது என பல்வேறு முக்கிய விவாதங்கள் அன்றைய தினம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஆளும் கட்சியாக இருந்து தோல்வியுற்றிருப்பதால், அரசின் கொள்கைகள் அல்லது செயல்பாடுகள் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தி குறித்து நாளை மறுநாள் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜிநாமா ஏற்பு
நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 176 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. இதில், 59 இடங்களில் மட்டுமே அது வெற்றி பெற்றது. ஆகையால், அது ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியாமல் போனது. இதையடுத்து, முதலமைச்சர் பதவியை மு.க. ஸ்டாலின் ராஜிநாமா செய்தார். இதற்கான கடிதத்தை தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் அவர் வழங்கினார். இதை ஏற்றுக் கொண்ட அவர் அடுத்து ஆட்சி அமையும் வரை பதவியை தொடருமாறு கூறியுள்ளார். இதற்கான அறிவிப்பை அவர் இன்று வெளியிடப்பட்டது.

கொளத்தூர் மக்களுக்கு நன்றி
தொடர்ந்து வெற்றி பெற்று வந்த கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தோல்வியுற்றிருந்தாலும், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். கொளத்தூர் தொகுதி முழுவதும் வீதி வீதியாக திறந்த வாகனத்தில் கை அசைத்தப்படி அவர் இன்று நன்றி தெரிவித்தார். மக்களும் உற்சாகமாக மு.க. ஸ்டாலினை வரவேற்றனர். அப்போது அங்கு அழுதபடி இருந்த தொண்டரைப் பார்த்து, அழாதீர்கள் என்று சைகையில் ஸ்டாலின் கூறினார்.
| இதையும் படிங்க: "15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்" | ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு விஜய் கடிதம் |
இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுளஅள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "கொளத்தூருக்கும் எனக்குமான உறவு வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு. 15 ஆண்டு காலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சியாகவும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடு எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன். உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்" என குறிப்பிட்டுள்ளார்.

