மிசா கொடுமைகளை புதிய காங்கிரஸ் தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்: ஆ.ராசா பேச்சு
நடிகர்கள் என்ன பேசினாலும் மக்கள் கைதட்டுவார்கள். நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகன். ஆனாலும் திமுகக்காரன். அதற்கு காரணம் சித்தாந்தம் தான் என சத்யராஜ் பேசினார்.

Published : March 3, 2026 at 7:58 AM IST
சென்னை: மிசா காலத்தில் திமுகவினருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து தற்போது உள்ள புதிய காங்கிரஸ் தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆ.ராசா கூறினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா, அம்பத்தூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் ஆ. ராசா பேசுகையில், "மிசா காலத்தில் திமுகவினருக்கு நடந்த கொடுமைகளை உலகம் அறிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, இன்றைக்கு உள்ள புதிய காங்கிரஸ் தலைவர்களும் அதனை தெரிந்து கொள்ள வேண்டும். ஒருமுறை இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசினேன். பிறகு வெளியே வந்ததும், என்னிடம் வந்த பிரியங்கா காந்தி, இத்தனை கொடுமைகள் நடந்ததா? என கேட்டார். அவரிடமும் அது பற்றி விளக்கினேன்.
இத்தனை நடந்த பிறகும், காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள்? என சிலர் கேட்கிறார்கள். அதற்கு விளக்கம் சொல்ல வேண்டியது நமது கடமை. மிசா சட்டத்தை கொண்டு வந்ததற்காக, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். திமுகவுடன் கூட்டணி அமைத்த பிறகு, சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் மன்னிப்பு கேட்டார்.
இந்த தவறுகளுக்கெல்லாம் இந்திரா காந்தி தான் காரணம் என நேரடியாக என கூறிவிட முடியாது. நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் வரை பாபர் மசூதி இடிக்கப்படவில்லை. பொது சிவில் சட்டமும் கொண்டு வரப்படவில்லை. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கவில்லை. நாங்கள் இருக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை.
நாங்கள் வெளியே வந்தவுடன் அனைத்து பிரச்சினைகளும் வந்து விட்டன. பெரியார், அண்ணா இருந்த போது ஆபத்து இல்லாமல் இருந்தது. ஆனால், இன்று நாடாளுமன்றத்தில் 400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் பாஜக தலைவிரித்து ஆடுகிறது. ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை நமது கொள்கையை காப்பாற்றுகின்ற மகத்துவமிக்க தலைவர் மு.க. ஸ்டாலினை நாம் பெற்றிருக்கிறோம்" என ஆ. ராசா பேசினார்.
தொடர்ந்து, நடிகர் சத்யராஜ் பேசுகையில், "சினிமாவில் டயலாக் பேசுவது வேறு. எந்த கன்டென்ட்டும் இல்லாமல் பேசி எளிதாக கைத்தட்டல் வாங்கிவிடலாம். எல்லா நடிகர்களுக்கும் இதை செய்ய தெரியும். ஆனால், அரசியல் மேடைகளில் கொள்கையை பேச வேண்டும். 'என்னம்மா கண்ணு' என்ற டயலாக் பேசினால் அறிவு வளராது. ஜாலியாக பேசலாம். அந்த காலத்தில் இருந்து தற்போது வரை இது நடக்கிறது.
நடிகர்கள் எது பேசினாலும் கை தட்டுவார்கள். நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகன். ஆனாலும் நான் திமுக காரன். அதற்கு காரணம் சித்தாந்தம் தான். சினிமா நடிகர்களை பார்க்க கூட்டம் வரத் தான் செய்யும். கைதட்டுவார்கள். அவ்வளவுதான்.
ஏனெனில், நம்முடைய குடும்பம் ஐந்து வருடங்களுக்கு முன்பாக எப்படி இருந்தது? இப்போது எப்படி உள்ளது? என அவர்கள் நினைத்து பார்ப்பார்கள். இது தமிழக மக்களின் மனசாட்சிக்கு தெரியும். இந்த தேர்தலில் நடைபெறுவது போட்டி அல்ல. சமூக நீதிக்கும், சனாதனத்துக்கும் இடையே நடக்கும் போர். இதை மக்கள் உணர வேண்டும். தமிழ்நாட்டை அயோத்தியாக மாற்றுவதற்கு சிலர் சகுனித்தனம் செய்கின்றனர். அது தான் திருப்பரங்குன்றத்தில் நடந்தது" என சத்யராஜ் பேசினார்.

