ETV Bharat / state

திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - அதிக தொகுதிகளை கேட்கும் மக்கள் நீதி மய்யம்?

நாங்கள் தேசியக்கட்சி என்பதால் துடைப்பம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் வசீகரன் கூறியுள்ளார்.

திமுக, மநீம தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
திமுக, மநீம தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 4, 2026 at 3:31 PM IST

3 Min Read
Choose ETV Bharat

சென்னை: திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது மக்கள் நீதி மய்யம் 15 தொகுதிகளுக்கான விருப்பப்பட்டியலை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளது. டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் உட்பட 9 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் 2 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐயூஎம்எல்), மனிதநேய மக்கள் கட்சி (மமக) ஆகிய கட்சிகளுடன் திமுக குழுவினர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் முடிவில், இரு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. முஸ்லீம் லீக் 'ஏணி' சின்னத்திலும், மமக 'உதயசூரியன்' சின்னத்திலும் போட்டியிட உள்ளது.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களை கேட்டு விடாபிடியாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அந்த கட்சியுடன் இன்று மாலை தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

திமுக கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தேமுதிகவிடம் நேரடி சட்டமன்ற தொகுதிகள் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அக்கட்சிக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் தான் இந்த கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இச்சூழலில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் (வியாழக்கிழமை) நிறைவடையவுள்ள நிலையில், தேமுதிகவுக்கு ஒரு இடம் நேற்று அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டது.

15 தொகுதிகள் கேட்கும் மநீம

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யத்துடன் திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மெளரியா, தங்கவேலு, பொதுச்செயலாளர் அருணாச்சலம், மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோர் திமு‌க குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, 15 தொகுதிகளுக்கான விருப்பப்பட்டியலை திமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த ஆம் ஆத்மி கட்சியினர்
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த ஆம் ஆத்மி கட்சியினர் (ETV Bharat Tamil Nadu)

மக்கள் நீதி மய்யம் கட்சியை பொறுத்தவரை கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் தான் தி.மு.க கூட்டணியில் இணைந்தது. ஆனால், ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம்‌ 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக தி.மு.க கூட்டணியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தி.மு.க கூட்டணிக்கு எவ்வாறு பலம் சேர்க்கப்போகிறது என்ற தரவுகளை கொடுத்து இருக்கிறோம். அதனை பார்த்துவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று கூறியுள்ளனர்” என்றார்.

எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என கோரிக்கை விடுத்தது குறித்து கேள்விக்கு, “கோழி முட்டையை அடைகாப்பது போல் காத்து குஞ்சு பொரிந்த பிறகு உங்களுக்கு சொல்கிறோம், அதுவரை அமைதி காக்கவும். போட்டியிடும் சின்னம் குறித்து விரிவாக ஆலோசனை செய்து முடிவெடுப்போம். திமுக கூட்டணி 200 தொகுதிகள் மேல் வெற்றி பெறும்” என கூறினார். தொடர்ந்து, திமுக தொகுதி பங்கீடு குழுவை, தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆம் ஆத்மி பேச்சுவார்த்தை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசீகரன், “சர்வாதிகார மோடியின் ஆட்சியை தடுக்கக் கூடிய ஆற்றல் திமுகவுக்கு மட்டும் தான் இருக்கிறது. மோடியின் ஆட்சியால் பாதிக்கப்பட்டது ஆம் ஆத்மி. ஆதாரமே இல்லாமல் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்தார்கள். எனவே, ஜனநாயகத்துக்கு ஆபத்து விளைவுக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது. தமிழ்நாடு மக்களையும் ஏமாற்றி விடலாம் என பாஜக நினைக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால், கட்சி பெரிதா? நாடு பெரிதா? என்ற போது நாடு தான் பெரிது என முடிவெடுத்து இண்டியா கூட்டணியில் இணைந்தார். அதேபோன்று தான் நாங்களும் முடிவெடுக்கிறோம்.

இந்த முறை எங்களுக்கு திமுக ஒரு வாய்ப்பை தரும் என நினைக்கிறோம். கெஜ்ரிவால், மற்றும் பஞ்சாப் முதலமைச்சரை பிரச்சாரத்துக்கு அழைத்து வருவேன். எங்கள் உயரத்துக்கும், தகுதிக்கும் ஏற்ற அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறோம். நாங்கள் தேசியக்கட்சி என்பதால் துடைப்பம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்” என கூறினார்.

இதையும் படிங்க: நான் வேண்டுமா? ஸ்டாலின் சார் வேண்டுமா? விஜய் கேள்வி

திமுக கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு பேச்சுவார்த்தை குழு வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை வழங்க தயாராக உள்ளதாகவும், கூட்டணி கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிட விரும்பினால் தொகுதிகளை குறைக்கவும் பேச்சுவார்த்தை குழு வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.