ETV Bharat / state

கும்பகோணம் காங்கிரஸ் மேயரை நீக்க திமுகவினர் திட்டம்?

இது வெறும் வதந்தி என்றும் ஆதாரபூர்வமான தகவல் இல்லை என்றும் கூறியுள்ளார் கும்பகோணம் மேயர் கே.சரவணன்.

கும்பகோணம் மேயர் கே. சரவணன் மற்றும் துணை மேயர் சு ப தமிழழகன்
கும்பகோணம் மேயர் கே. சரவணன் மற்றும் துணை மேயர் சு ப தமிழழகன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2026 at 1:55 PM IST

2 Min Read
Choose ETV Bharat

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மேயராக பதவி வகிக்கும் காங்கிரஸை சேர்ந்த சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து தங்களது கட்சியை சேர்ந்தவரை மேயராக்க திமுகவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி தவெக தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சியமைக்க மேலும் 11 தொகுதிகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் தவெக சார்பில் காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கிறது. மேலும், இனிவரும் காலங்களில் உள்ளாட்சி, மாநிலங்களவை, மக்களவை என அனைத்திலும் தவெகவுடன் கூட்டணி தொடரும் என பகிரங்கமாகவும், வெளிப்படையாகவும் அறிவித்துள்ளது.

காங்கிரஸின் இந்த நிலைப்பாட்டுக்கு திமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அதன் விளைவாக, கும்பகோணத்தில் மேயராக பதவி வகித்து வருகிற காங்கிரஸைச் சேர்ந்த கே. சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, துணை மேயரான திமுகவை சேர்ந்த சு ப தமிழழகனை மேயராக்க திமுகவினர் திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக திமுக தலைமையின் முடிவிற்கு காத்திருப்பதாக தெரிகிறது.

கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில், 39-ல் திமுகவும், 3-ல் அதிமுகவும், (மேயர் உள்ளிட்ட) 2 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும், மதிமுக, ஐயூஎம்எல், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன.

திமுக 39 இடங்களை பெற்றிருந்த போதிலும், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தது. காங்கிரஸின் இரு மாமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஆட்டோ ஓட்டுநர் கே. சரவணன் கும்பகோண மேயராகவும், துணை மேயராக திமுகவை சேர்ந்த சு ப தமிழழகனும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: மீண்டும் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதே சரியான தீர்வு: ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தல்

தற்போது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில் கும்பகோணம் திமுக மாமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் மேயரை பதவியிலிருந்து நீக்க ஒருமனதாக திட்டமிட்டு வருவதாக தற்போது சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

இது தொடர்பாக ஈடிவி பாரத் சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேயர் கே சரவணனிடம் கேட்டபோது, “இது வெறும் வதந்தி. ஆதாரப்பூர்வமான தகவல் இல்லை. திமுக அப்படியொரு முடிவை எடுத்தால், காங்கிரஸ் திமுகவிற்கு ஆதரவு அளித்துள்ள தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களிலும் எதிரொலிக்கும்.

எனவே இது போன்ற முடிவை திமுக தலைமை எடுக்காது என நம்புகிறேன். ஒருவேளை திமுக தலைமை என்னை மேயர் பதவியில் இருந்து நீக்க தீர்மானம் கொண்டு வந்தால், எங்கள் காங்கிரஸ் தலைமையின் முடிவை கேட்டு அதன்படி செயல்படுவேன்” என்றார்.