ETV Bharat / state

மாநிலங்களவைக்கு செல்லும் 6 பேர் யார்? திமுக-அதிமுக இன்று அறிவிக்க வாய்ப்பு

சில கட்சிகளுடன் கூட்டணி உறுதி செய்யப்படாததால், மார்ச் 5 ஆம் தேதி மாநிலங்களவை விருப்ப மனுதாக்கல் இறுதி நாளாக இருந்தும், தற்போது வரை திமுக - அதிமுக வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளன

கோப்புப் படம்
கோப்புப் படம் (Sansad TV)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 3, 2026 at 5:24 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர்களை, திமுக மற்றும் அதிமுக இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காலியாகும் 37 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை பொறுத்தவரையில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் 18 இடங்கள் உள்ளன.

இவை சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறும். அந்த வகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி சிவா, என்.ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், என்.வி.என். கனிமொழி சோமு, தம்பிதுரை, ஜி.கே. வாசன் ஆகிய ஆறு பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

எனவே, காலியாகும் இடங்களில் போட்டியிட விரும்புவோருக்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 5-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்த மாநிலங்களவை தேர்தலில் 34 எம்எல்ஏக்கள் வாக்களித்தால் ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க இயலும். அத்தகைய சூழ்நிலையில், திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பாக 2 பேரும் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)

சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதான கட்சிகளான திமுக - அதிமுக இரண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பேச்சுவார்த்தையின் போது மாநிலங்களவை இடத்தை கூட சில கட்சிகள் கேட்டுள்ளன.

இதன் காரணமாக, மார்ச் 5 ஆம் தேதி மாநிலங்களவை விருப்ப மனுதாக்கல் இறுதி நாளாக இருந்தும் தற்போது வரை திமுக - அதிமுக வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளன. மார்ச் 5 ஆம் தேதி தான் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் இன்றுக்குள் திமுக - அதிமுக வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவிடம் உள்ள 4 மாநிலங்களவை இடங்களில் திமுக துணைப்பொதுச்செயலாளர் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி இந்த இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணிக்கு வராதபட்சத்தில் எம்.எம்.அப்துல்லாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. திமுக சார்பில் தேமுதிகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட உள்ளதாகவும், அதில் சுதீஷ் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி (ETV Bharat Tamil Nadu)

அதிமுக சார்பில் தம்பிதுரைக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும், மற்றொரு இடம் அன்புமணி அல்லது சௌமியா அன்புமணிக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேட்பு மனுக்கள் மார்ச் 6 அன்று பரிசீலிக்கப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9 ஆம் தேதி கடைசி நாளாகும். போட்டி இருந்தால் மார்ச் 16 ஆம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் அன்று மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 20-யில் தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொடரும் இழுபறி... முதல்வருடனான ஆலோசனைக்கு பின்னரும் முடிவாகாத திமுக - காங்கிரஸ் கூட்டணி

மாநிலங்களவை தேர்தலுக்காக, தமிழக சட்டப்பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளர் சாந்தி தேர்தல் நடத்தும் அலுவலராகவும், பேரவைச் செயலகத்தின் இணைச் செயலாளர் தேன்மொழி உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும் தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.