ETV Bharat / state

குங்குமப்பூவில் இப்படி ஒரு ஸ்வீட்டா? திருநெல்வேலி அல்வாவுக்கு 'டஃப்' கொடுக்கும் திருபாகம்!

திருநெல்வேலியில் அல்வா எப்படி புகழ் பெற்றதோ, அதே போல் திருபாகம் என்ற ஸ்வீட்டும் புகழ் பெற்று விளங்குகிறது.

திருபாகம் ஸ்வீட் விற்பனைக்காக தயார் செய்யப்பட்டுள்ளது.
விற்பனைக்காக தயாராக உள்ள திருபாகம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : October 17, 2025 at 4:33 PM IST

3 Min Read
Choose ETV Bharat

-By இரா. மணிகண்டன்

திருநெல்வேலி: தீபாவளி நெருங்கி வரும் நிலையில், நெல்லையில் திருபாகம் என்ற ஸ்பெஷல் ஸ்வீட் பிரபலமாகி வருகிறது. அது என்ன திருநெல்வேலி அல்வாவை விட ஸ்பெஷல் ஸ்வீட்? என்று தானே யோசனை செய்கிறீர்கள்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வகை பலகாரம் புகழ் பெற்றதாக இருக்கும். அதே போல, தான் திருநெல்வேலியிலும்! அல்வா முன்னணியில் இருந்தாலும், வேறு சில பலகாரங்களும் இங்கு பிரபலமாகவே உள்ளன.

இந்த தீபாவளிக்காக நெல்லை டவுன், சந்திப்பு, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள கடைகளுக்காக அல்வா, ஜிலேபி, பாதுஷா, லட்டு, பூந்தி, மிக்சர், காரசேவ் என பலகார வகைகள் தயாரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது.

விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் அதிரசம்
விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் அதிரசம் (ETV Bharat Tamil Nadu)

திருப்பாகம் ஸ்வீட் என்றால் என்ன?

இந்த நிலையில், மற்றொரு இனிப்பு வகையும் தற்போது நெல்லை மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சிறு பருப்பு, பால், முந்திரி பருப்பு, கடலை மாவு, நெய், குங்குமப்பூ ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படும் ‘திருபாகம்’ இனிப்பு வகையை தேடி மக்கள் வரத் தொடங்கியுள்ளதாக இனிப்புக் கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

திருபாகம் ஸ்வீட் செய்முறை
திருபாகம் ஸ்வீட் செய்முறை (ETV Bharat Tamil Nadu)

நெல்லை பகுதியைச் சேர்ந்தவர்கள், இந்த திருபாகம் இனிப்பு வகையை, தங்கள் வீடுகளின் சுப நிகழ்ச்சிகளுக்கு அதிகளவு பயன்படுத்துகின்றனர். குறிப்பாக திருமணச் சடங்குகளில் இந்த திருபாகம் இனிப்பு வகை தவறாமல் தற்போது இடம் பெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது திருநெல்வேலி டவுன் பகுதிகளில் மட்டும் பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது.

இந்த தீபாவளி பண்டிகைக்கு, திருபாகம் இனிப்பு வகையையும், அதிகளவில் தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க கடைக்காரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருபாகம் தயார் செய்வது எப்படி?

சுத்தமான பசும் பால், சிறு பருப்பு, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், முந்திரி பருப்பு, வெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி இந்த திருபாகம் ஸ்வீட் தயார் செய்யப்படுகிறது. சிறு பருப்பை மாவாக அரைத்து, அதில் குங்குமப்பூ உள்பட அனைத்து பொருட்களையும் சேர்த்து, பாலில் ஊற வைக்க வேண்டும். பின்னர் சட்டியில் வெண்ணெய் ஊற்றி, பாலில் ஊற வைத்த கலவையை போட்டு ஸ்வீட் பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும்.

நெல்லை ஸ்பெஷல் திருப்பாகம் ஸ்வீட்
நெல்லை ஸ்பெஷல் திருப்பாகம் ஸ்வீட் (ETV Bharat Tamil Nadu)

இறுதியாக கிடைக்கும் இறுக்காமான கலவையை, ஒரு பரந்த பாத்திரத்தில் கொட்டி அறை வெப்ப நிலையில் காய விடுகிறார்கள். பின்னர், அவை நன்றாகக் காய்ந்தவுடன், பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, பட்டர் பேப்பரில் மடிக்கிறார்கள். இந்த நிலைகளைக் கடந்து, சுவையான திருபாகம் ஸ்வீட் கடைகளில் விற்பனைக்கு வருகிறது.

முக்கியமாக, திருபாகம் ஸ்வீட்டை அதிகபட்சமாக பத்து நாட்கள் வரை வெளியே வைத்து சாப்பிட முடியும். அத்தனை நாள்கள் வரை அவை கெட்டுப் போகாமல் இருக்கும் என்று திருபாகத்தை செய்யும் இனிப்பக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திருநெல்வேலியின் ஸ்பெஷல் திருபாகம் ஸ்வீட் (ETV Bharat Tamil Nadu)

களை கட்டும் தீபாவளி ஸ்வீட் விற்பனை

இது குறித்து திருபாகம் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அய்யப்பன் நம்மிடம் பேசுகையில், “எங்கள் கடையில் திருபாகம் ஸ்வீட் தான் பிரதானம். இதை தவிர பெங்காலி ஸ்வீட், மைசூர் பாக், லட்டு, பால்கோவா, முந்திரி ஸ்வீட், கேரட் அல்வா, பால் அல்வா, தடியங்காய் அல்வா, அண்ணாச்சிப் பழம் அல்வா என விதவிதமான ஸ்வீட் தயாரிக்கிறோம். குறிப்பாக திருபாகம் எங்கள் கடையில் மட்டும் தான் தயார் செய்யப்படுகிறது. இதை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்” என்றார்.

நெல்லை டவுன் பகுதியில் நான்காவது தலைமுறையாக இனிப்பகம் நடத்தி வரும் நயன்சிங் கூறுகையில், “எங்கள் கடையில் பாரம்பரிய ஸ்வீட் மற்றும் விதவிதமான அல்வா விற்பனை செய்கிறோம். திருநெல்வேலியில் அல்வா எப்படி புகழ் பெற்றதோ, அதே போல் திருபாகம் என்ற ஸ்வீட்டும் புகழ் பெற்று வருகிறது. ஆனால், இன்னும் பெரிய அளவில் இந்த ஸ்வீட் மக்களிடம் சென்றடையவில்லை.

இதையும் படிங்க
  1. 14 ஆண்டுகளில் 379 உயிரிழப்புகள்... கண்ணீர் வரவழைக்கும் 'பட்டாசு' நகரின் கதை!
  2. தீபாவளி விற்பனைக்காக தடபுடலாக தயாராகும் இனிப்பு வகைகள்!
  3. தீபாவளிக்கு ஊருக்கு போக டிக்கெட் கிடைக்கலயா? அப்போ இந்த அப்டேட் உங்களுக்கு தான்!a

திருப்பாகம் ஸ்வீட் திருநெல்வேலியில் முன்பு பலர் தயார் செய்தனர். ஆனால், நாளடைவில் யாரும் அதை தயார் செய்யவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள் அந்த ஸ்வீட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.

முறுக்கு சுற்றும் பெண்கள்
முறுக்கு சுற்றும் பெண்கள் (ETV Bharat Tamil Nadu)

அதோடு மட்டுமல்லாமல், பல புதிய ரக இனிப்புகளையும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கடை உரிமையாளர்கள் செய்து வருகின்றனர்.

இனிப்பு ஒருபுறம் என்றாலும், கைசுற்று முருக்கு, தட்டை, அதிரசம், முந்திரிக் கொத்து என பாரம்பரிய பலகாரங்களை தயாரிக்கும் பணிகளும் மறுபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பெண்கள் கூட்டமாக அமர்ந்து கை சுற்று முறுக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தீபாவளியை முன்னிட்டு பலகாரங்களுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து மொத்தமாக ஆர்டர் கிடைத்து வருவதாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.