ETV Bharat / state

'பிட்' பேப்பருடன் சிக்கிய பிளஸ் 2 மாணவர்கள்; ஜெராக்ஸ் கடைகளுக்கு கடும் எச்சரிக்கை

மாணவர்களுக்கு பிட் அடிக்கும் வசதிக்காக மினி ஜெராக்ஸ் போட்டுக் கொடுக்கும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரித்துள்ளார்.

மினி ஜெராக்ஸ் பிட்
மினி ஜெராக்ஸ் பிட் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 2, 2026 at 8:17 PM IST

2 Min Read
Choose ETV Bharat

திருநெல்வேலி: பிளஸ் 2 தேர்வு மையத்தில் மாணவர்களிடம் இருந்து மினி ஜெராக்ஸ் பிட் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (மார்ச் 2) தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் 73 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. இதில் 8,791 மாணவர்கள், 11,044 மாணவிகள் என மொத்தமாக 19,835 பேர் தேர்வு எழுதினர். மாவட்டம் முழுவதும் தேர்வு கண்காணிப்பு பணியில் 1,440 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்தது.

மேலும் தேர்வில் முறைகேடு நடக்காத வண்ணம் கண்காணிக்கும் வகையில் 150 ஆசிரியர்களை கொண்ட நிலையான கண்காணிப்பு குழு, பறக்கும் படை குழுவினரும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாளையங்கோட்டை மத்திய சிறையில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை சிறைவாசிகள் எழுத தனி மையமும் அமைக்கப்பட்டது.

மேலும் 193 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் ஸ்கிரீன் முறையில் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தேர்வு மையங்கள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியும் நடந்தது.

இந்நிலையில், பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பல்வேறு தேர்வு மையங்களில் மாணவர்களிடம் 'மினி ஜெராக்ஸ்' கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் பிட் அடிக்கும் நோக்கத்தில் மினி ஜெராக்ஸ் போட்டு அதனை சட்டை பையில் மறைத்து வைத்து தேர்வு எழுத சென்றுள்ளனர். ஆனால் தேர்வு அறைக்கு வெளியே சோதனை செய்த போது அவர்கள் கையும் களவுமாக பிடிபட்ட நிலையில் மினி ஜெராக்ஸ் கைப்பற்றப்பட்டது. இதை அடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள ஜெராக்ஸ் கடைகளுக்கு மாவட்ட கல்வி அலுவலகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில், '' பிளஸ் டூ பொதுத்தேர்வு இன்று திருநெல்வேலி மாவட்ட முழுவதும் சிறப்பாக தொடங்கியது. மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முதன்மை கல்வி அலுவலரின் தலைமையிலான பறக்கும் படையில் ஆய்வின் போது தேர்வு அறைக்குள் நுழையும் முன் மாணவர்களை சோதனை செய்துள்ளனர். அப்போது மாணவர்கள் பிட் அடிக்கும் நோக்கத்தில் மினி ஜெராக்ஸ் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவை உடனடியாக மாணவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

மாணவர்களிடம் விசாரித்ததில், ஜெராக்ஸ் கடையில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அந்த ஜெராக்ஸ் கடைக்கு நேரடியாக சென்று எச்சரிக்கையும் செய்யப்பட்டது. எனவே மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு ஜெராக்ஸ் கடையிலும் மாணவர்கள் பிட் அடிப்பதற்காக மினி ஜெராக்ஸ் போட்டு கொடுக்கக் கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனை மீறி மாணவர்களுக்கு பிட் அடிக்கும் வசதிக்காக மினி ஜெராக்ஸ் போட்டுக் கொடுக்கும் கடைகள் மீது உரிய விசாரணைக்கு பிறகு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'திக் திக்' பணிகளில் 8 ஆண்டுகள் சேவை... சென்னை ஏர்போர்ட் பாதுகாப்பு பிரிவில் இருந்து 3 மோப்ப நாய்கள் ஓய்வு!