அரசு வேலை வேண்டி தோல் நோய் பாதிக்கப்பட்ட இளைஞர் மனு - போட்டித்தேர்விற்கு பயிற்சியளிக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை
அரசு வேலை பெற போட்டித் தேர்வெழுதி தகுதிப் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவுறுத்தினார்.

Published : July 7, 2026 at 9:53 AM IST
அரியலூர்: அரசு வேலை கேட்டு ஆட்சியரிடம் மனுவளித்த தோல் நோய் பாதித்த இளைஞருக்கு போட்டித்தேர்வு மையத்தில் பயிற்சி அளிக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை (ஜூலை 6), மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அசாவீரன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த தோல் நோய் பாதிக்கப்பட்ட சக்திராஜ் என்ற இளைஞர் பங்கேற்று, அரசு வேலை வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்தார்.
தமிழ் பாடத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த இவர், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்திருந்தும், இதுவரை தனக்கு வேலை கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மிருணாளினியிடம் மனு அளித்து, அரசு வேலை கிடைக்க உதவி செய்யுமாறு கேட்டார். அவரின் மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், இதுவரை அரசுப் பணிக்காக போட்டித் தேர்வை எழுதியுள்ளீர்களா என கேள்வி கேட்டார். அதற்கு ஏற்கனவே எழுதியதாகவும், குறைந்த மதிப்பெண்களால் தோல்வியடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, தற்போது என்ன வேலை செய்கிறீர்கள் என ஆட்சியர் கேள்வி எழுப்பியதற்கு, விவசாய வேலைகள் செய்வதாக சக்திராஜ் பதிலளித்தார். கடை வைப்பதற்கு ஏதேனும் கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்க எடுக்கட்டுமா என ஆட்சியர் கேட்டதற்கு, தனக்கு அரசு வேலை கிடைக்க உதவி செய்யுமாறு கேட்டார்.
| இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக தலைவர்களுக்கு எதிரான திமுகவின் அவசர மனு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை |
அதனையடுத்து, அரசு வேலை பெற போட்டித் தேர்வெழுதி தகுதிப் பெற வேண்டும் என அறிவுறுத்திய ஆட்சியர், அவருக்கு அரசு சார்பில் போட்டித்தேர்விற்கான பயிற்சி மையத்தில் சேர்த்துவிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், அவரின் மனுவை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனுப்பி, அவரது பதிவை புதுப்பிக்க அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
இதுபோன்று மக்கள் குறைதீர் முகாமிற்கு வருகை தந்திருந்த பலரிடன் நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார். மேலும், மனுக்களை அந்தந்த துறைகளுக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மக்களின் குறைகளை பொறுமையோடு கேட்டு, அவற்றுக்கான தீர்வுகளை வழங்கும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினியின் செயல் அரியலூர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

