விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க கோரிய வழக்கு - வைகோ மனு தள்ளுபடி
தடை விதித்து புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், பழைய உத்தரவுகளில் என்ன சொல்லப்பட்டதோ? அதே தான் அடுத்தடுத்த உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளன என வைகோ வாதிட்டார்.

Published : February 24, 2026 at 4:58 PM IST
சென்னை: விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் 2012 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம், சென்னை அருகே உள்ள ஶ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த போது, மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த உத்தரவு, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மத்திய அரசு கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பின் தடையை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டித்து வருகிறது. இதையடுத்து, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 2013 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுதிர்குமார் அமர்வில் இன்று (பிப்ரவரி 24) இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், "தடை உத்தரவை உறுதி செய்வதற்கான தீர்ப்பாய விசாரணையில் தன்னையும் ஒரு வாதியாக சேர்க்கக் கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை, டெல்லி தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து விட்டதால், மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்ய அதிகாரம் இல்லை" என தெரிவித்தார்.
மேலும், "தடையை எதிர்த்து விடுதலைப்புலிகள் அமைப்பு வழக்கு தொடராமல், தடையை எதிர்த்து வேறு எவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. விசாரணை நடைமுறைகள் அனைத்தும் டெல்லியில் நடந்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.
புலிகள் அமைப்பு அச்சுறுத்தலாக நீடிப்பதாக கருதிய மத்திய அரசு, 2014 ஆம் ஆண்டுக்கு பின் 2019 மற்றும் 2024 ம் ஆண்டுகளில் தடை குறித்து புதிய உத்தரவுகள் பிறப்பித்தது. அந்த உத்தரவுகளை எதிர்த்தும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், 2012 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல" என வாதிட்டார்.
மனுதாரரான வைகோ, "விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து ஆதரவாளர், அனுதாபி என்ற அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன். இந்தியாவுடன் தமிழீழத்தை இணைக்க முயற்சித்ததாக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே, மத்திய அரசின் தடை சட்டவிரோதமானது. அதனால், தடையை நீக்க வேண்டும்" என வாதிட்டார்.
மேலும், இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என, பல்வேறு சம்பவங்களை சுட்டிக் காட்டிய வைகோ, தடை விதித்து புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், பழைய உத்தரவுகளில் என்ன சொல்லப்பட்டதோ? அதே தான் அடுத்தடுத்த உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளன என விளக்கமாக வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தற்போது 2024-ல் அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் தடை உத்தரவு தான் அமலில் உள்ளது. காலாவதியான உத்தரவின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி, வைகோ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

