ETV Bharat / state

இறைச்சிக் கடைகளில் ஆடு, கோழி, மாடு வெட்டுவதற்கு தடை கோரிய மனு தள்ளுபடி

பொதுவான குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 2, 2026 at 5:00 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: இறைச்சி கடைகளில் ஆடு, கோழி மற்றும் மாடுகள் வெட்டுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிருகவதை தடுப்பு சட்டத் திருத்தம் 2001-ன் படி ஆடு, மாடு, கோழிகளை வெட்ட தனி இடங்களை ஒதுக்க வேண்டும் எனவும், அங்கீகரிக்கப்பட்ட, உரிமம் பெற்ற இடங்களை தவிர வேறு பகுதிகளில் விலங்குகளை வெட்ட அனுமதிக்க கூடாது. மற்ற விலங்குகளின் கண் முன் விலங்குகளை வெட்டக் கூடாது, ரத்தத்தை முறையாக சேகரிக்க வேண்டும். விலங்குகள் வெட்ட உருவாக்கப்பட்டுள்ள ஆடு தொட்டிகளில் கால்நடை மருத்துவர் சான்றளிக்கும் விலங்குகளை மட்டுமே வெட்ட வேண்டும். நோய் வாயப்பட்ட விலங்குகளை வெட்டக் கூடாது எனவும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்ட விதிகளை மீறி, இறைச்சி கடைகளிலேயே விலங்குகள் வெட்டப்படுவதாகக் கூறி, விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் மிருகவதை தடுப்புச் சட்டம் முழுமையாக பின்பற்றப்படுவதில்லை. இறைச்சிக் கடைகளின் பின்புறமே ஆடுகள் வெட்டப்படுகின்றன. மேலும் வெட்டப்படும் விலங்குகளின் கழிவுகள் மற்றும் ரத்தம் நேரடியாக சாக்கடை கால்வாய்களில் கலக்கப்படுகிறது.

இறைச்சிக் கழிவுகள் குப்பை தொட்டிகளில் போடப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே மிருகவதை தடுப்பு சட்ட விதிகளையும், உணவு பாதுகாப்பு சட்டம் 2006 மற்றும் தர சட்ட விதிகளையும் கண்டிப்புடன் பின்பற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:

  1. “அதிமுக - என்டிஏ கூட்டணியில் யாருக்கு யார் தலைமை என்பதே தெரியாமல் உள்ளார்கள்” - விளாசிய மு.க.ஸ்டாலின்

2. மார்பக புற்றுநோயில் 25% பரம்பரை பாதிப்பு! பழைய மரபணு சோதனை முறை இனி போதாது - சென்னை ஐஐடி ஆய்வு!

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஆர். சுரேஷ்குமார் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், குறிப்பிட்டு எந்த கடையில் ஆடுகள் வெட்டப்படுகின்றன? எனக் கூறாமல், பொதுவான குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.