இறந்தவர்களுக்கு வரும் தபால்கள், பார்சல்கள் - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
விதிகளில் திருத்தம் கொண்டு வரும் வகையில் உத்தரவு நகலை தபால் சேவைகள் இயக்குநர் ஜெனரலுக்கு மத்திய அரசு சார்பில் அனுப்பி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Published : March 2, 2026 at 8:38 PM IST
சென்னை: இறந்தவர்களுக்கு வரும் தபால்கள் மற்றும் பார்சல்களை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வருமாறு தபால் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை நீலாங்கரையை சேர்ந்த மோகனா ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "எனது கணவர் இறந்து விட்டார். தொடர்ந்து அவரது பெயருக்கு இதுவரை தபால்களும், பார்சல்களும் வருகின்றன. அந்த தபால் மற்றும் பார்சல்களை தபால் துறையினர் எங்களிடம் தராமல் திரும்ப கொண்டு செல்கிறார்கள். எனவே, எனது கணவர் பெயருக்கு வரும் தபால்களை அவரது மனைவியான என்னிடம் தருமாறு அஞ்சல் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.
மோகனா ராமசாமி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விதிகளின் படி தபால்களை சம்மந்தப்பட்ட நபர்களிடம் மட்டுமே தர வேண்டும் என்பதால், அவரது உறவினர்களிடம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்திய தபால் அலுவல் சட்டம் பிரிவு 51-ல் இறந்து போனவர்களின் முகவரிக்கு வரும் தபால்கள் யாரும் கோராத ஆவணமாகவே கருதப்படும். இதனால் இறந்து போனவர்களின் முகவரிக்கு வரும் கடிதங்கள், பார்சல்களை யார் அனுப்பினார்களோ? அவர்களுக்கே திரும்ப அனுப்பப்படுகிறது. அனுப்பியவர்கள் முகவரி இல்லை என்றால் சம்மந்தப்பட்ட தபால் அலுவலகத்திலேயே பாதுகாப்பு அறையில் வைக்கப்படும் என்று குறிப்பிடுகிறது.
ஆனால், தபால் சட்டம் பிரிவு 65 துணை விதி 1-ல் தபாலை அனுப்பியவர் இல்லையென்றால் அந்த தபால் அழிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த குழப்பமான பிரிவுகளால் மனுதாரரைப் போல் பலர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த பிரிவுகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு இறந்து போனவருக்கு வரும் தபால்கள், பார்சல்களை அவர்களின் வாரிசுகளுக்கு தருமாறு மாற்றம் செய்ய வேண்டும்.
இதையும் படியுங்க: 'பிட்' பேப்பருடன் சிக்கிய பிளஸ் 2 மாணவர்கள்; ஜெராக்ஸ் கடைகளுக்கு கடும் எச்சரிக்கை
இது தொடர்பான விதிகளில் திருத்தம் கொண்டு வரும் வகையில் இந்த உத்தரவு நகலை தபால் சேவைகள் இயக்குநர் ஜெனரலுக்கு மத்திய அரசு சார்பில் அனுப்பி வைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

