ரூ.100 கோடியை கடந்த வருவாய்: சாதனை படைத்த பழனி முருகன் கோயில்
கடந்த 1435 ஆம் பசலி ஆண்டில் பழனி மலைக்கோயிலின் மொத்த வருவாய் ரூ.103,24,13,525 ஆக உயர்ந்துள்ளது.

Published : July 7, 2026 at 8:55 PM IST
திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் வருவாய் ரூ.100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக திகழ்கிறது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர்.
அதிலும், விசேஷ நாட்கள் மற்றும் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி விழா உள்ளிட்ட திருவிழாக் காலங்கள் மற்றும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் வருகை என பக்தர்களின் எண்ணிக்கை லட்சங்களை தாண்டுகிறது.
மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் பயன்படுத்தும் மின் இழுவை ரயில், ரோப் கார், விரைவு தரிசன டிக்கெட்டுகள், காலபூஜைக் கட்டணங்கள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அனைத்து வகையான அபிஷேகக் கட்டணங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற தங்கரத உலா போன்ற சேவைகளுக்காக பக்தர்கள் செலுத்தும் கட்டணங்கள், உண்டியல் காணிக்கைகள் உள்ளிட்ட ஆன்லைன் மற்றும் நேரடி கவுண்டர்கள் மூலம் பணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கணக்கு வழக்கின்படி, இந்த அனைத்துச் சேவைகளின் மூலமும் வரும் வருமானம் 'பசலி ஆண்டு' (ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
அதன்படி, தற்போது வெளியாகியுள்ள மலைக்கோயில் வரவு ஒப்பீட்டுப் பட்டியலின்படி, கடந்த 1435 ஆம் பசலி ஆண்டில் (1 ஜூலை 2025 - 30 ஜூன் 2026) பழனி மலைக்கோயிலின் மொத்த வருவாய் ரூ.103,24,13,525 (ரூ.103 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 525) ஆக உயர்ந்துள்ளது. அதாவது, முதன்முறையாக 100 கோடி ரூபாயைத் தாண்டி, பழனி கோயில் மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் பழனி கோயிலின் வருவாய் அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது என்பதை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இந்த பட்டியல் தெளிவுபடுத்துகிறது.
- 2020 - ரூ.15,28,94,560 (சுமார் 15.28 கோடி)
- 2021 - ரூ.41,97,82,755 (சுமார் 41.97 கோடி)
- 2022 - ரூ.80,62,20,267 (சுமார் 80.62 கோடி)
- 2023 - ரூ.86,06,06,774 (சுமார் 86.06 கோடி)
- 2024 - ரூ.97,32,20,918 (சுமார் 97.32 கோடி)
- 2025 - ரூ. 103,24,13,525 (103.24 கோடி)
கடைசியாக ரூ. 97 கோடியாக இருந்த வருவாய், இந்த முறை ரூ. 103 கோடியாக உயர்ந்துள்ளது. இது பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. இந்த வருவாய் அனைத்தும் கோயிலின் உள்கட்டமைப்பு வசதிகள், பக்தர்களுக்கான அன்னதானம் மற்றும் தூய்மைப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

