ETV Bharat / state

ஆன்லைன் மோசடி: பணத்தை இழந்த நத்தம் இளைஞர் விபரீத முடிவு; உறவினர்கள் சாலை மறியல்

இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தை அறிந்த அவரது உறவினர்கள் நத்தம் - மதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதிநிதித்துவ படம்
பிரதிநிதித்துவ படம் (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 31, 2026 at 11:51 PM IST

|

Updated : September 1, 2026 at 11:21 AM IST

2 Min Read
Choose ETV Bharat

மதுரை: மதுரை அருகே நடந்த ஆன்லைன் மோசடியில் சிக்கி லட்சக்கணக்கான பணத்தை இழந்த நத்தம் இளைஞர் ஒருவர், தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர், அலங்காநல்லூர் பகுதிகளில் எஃப்.க்யூ.எல் செயலி (FQL App) மூலமாக கிரிப்டோகரன்சி மூலம் பணத்தை இரட்டிப்பாக்கலாம் எனக் கூறி மிகப்பெரிய ஆன்லைன் மோசடி நடைபெற்றுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். பலர் தங்கள் நிலம் உள்ளிட்ட சொத்துகளை விற்று பணத்தை முதலீடு செய்து அதனை பறிகொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக பெறப்பட்டட புகார்களின் அடிப்படையில், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 13 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

எஃப்க்யூஎல் செயலியால் வீபரீத முடிவை எடுத்த ராசு என்ற மாயழகன்
எஃப்க்யூஎல் செயலியால் வீபரீத முடிவை எடுத்த ராசு என்ற மாயழகன் (ETV Bharat Tamil Nadu)

இதனிடையே, இந்த மோசடி தொடர்பான வழக்குகள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள காசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராசு என்ற மாயழகன் (வயது 24). இவர் விவசாய கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவரும் எஃப்க்யூஎல் செயலியில் 2 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார்.

மேலும், இந்த செயலியில் இவர் ஏஜெண்டாக இருந்ததால் இவர் மூலம் காசம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கானோர் இந்த செயலியில் பணம் முதலீடு செய்துள்ளனர். அதன் மொத்த தொகை சுமார் 13 லட்சம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், எஃப்க்யூஎல் செயலியில் பணம் கட்டி ஏமாற்றமடைந்தவர்கள், ராசுவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 31) காசம்பட்டி பகுதியில் உள்ள மாந்தோப்பு ஒன்றில் ராசுவின் உடல் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, ராசுவின் உடலை தூக்கிக்கொண்டு அவரது உறவினர்கள் மதுரை செல்லும் நெடுஞ்சாலையில், சொக்கன் ஆசாரி கண்மாய் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் தேவநாதன் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், ராசுவை கொலை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டினர்.

இளைஞர் விபரீத முடிவு உறவினர்கள் சாலை மறியல்
இளைஞர் விபரீத முடிவு உறவினர்கள் சாலை மறியல் (ETV Bharat Tamil Nadu)

இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. தொடர்ந்து, ராசுவின் உடலை உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்: டெல்லியில் ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

அப்போது, காவலர்களின் வாகனங்களின் மீது அங்கிருந்தவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, கூடுதல் காவலர்கள் அந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் சசிமோகன் சம்பவ இடத்திற்கு வந்து இதுகுறித்து தகவல்களை கேட்டறிந்தார். மேலும், காவல்துறை தரப்பில் இச்சம்பவம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல

வாழ்வதற்கு புது நம்பிக்கையைப் பெற தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-ஐ தொடர்பு கொண்டு பேசலாம். சிநேகா தொண்டு நிறுவனத்தை தொலைபேசி மூலமாக +91 44 2464 0050, +91 44 2464 0060, இமெயில் மூலமாக help@snehaindia.org தொடர்பு கொள்ளலாம் அல்லது டாடா நிறுவனத்தின் 91529 87821 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம்.

Last Updated : September 1, 2026 at 11:21 AM IST