டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: ரூ.15 லட்சத்தை பறிகொடுத்த முன்னாள் மத்திய அரசு அதிகாரி
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் BNS பிரிவு 318(4) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published : January 7, 2026 at 9:34 PM IST
திருநெல்வேலி: ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி மூலம் முன்னாள் மத்திய அரசு ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) பணியாற்றி ஓய்வுபெற்றவர். இந்நிலையில், கடந்த டிசம்பர் 27, 2025 அன்று, இவரது மொபைல் எண்ணிற்கு வந்த அழைப்பில் பேசிய அடையாளம் தெரியாத நபர்கள், அவரது எண்ணைப் பயன்படுத்தி சட்டவிரோத பணப்பரிமாற்றம் (Money Laundering) நடைபெற்றுள்ளதாகக் கூறி மிரட்டியுள்ளனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட அவர்கள், ரங்கநாதனை 'டிஜிட்டல் அரெஸ்ட்' (Digital Arrest) செய்வதாகத் தெரிவித்துள்ளனர். எனவே, வழக்கிலிருந்து விடுவிக்க உதவுவதாகக் கூறி, குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறு அவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
இதனை நம்பிய ரங்கநாதன் தனது எஸ்பிஐ (SBI) வங்கிக் கணக்கிலிருந்து, ரூ.15 லட்சத்தை ஆர்டிஜிஎஸ் (RTGS) மூலம் 'ஸ்ரீ சாய் சுவர்ணா ஃபிலிம்ஸ்' என்ற பெயரிலான ஆக்சிஸ் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த ரங்கநாதன், திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல்துறையிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 318(4) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்று அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், முன்பின் தெரியாத நபர்களின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டாம் என்றும் காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். எனினும், இதுபோன்ற குற்றங்களில் மூத்த குடிமக்கள் ஏமாற்றப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| இதையும் படிங்க: ‘ஜனநாயகன்’ மீது குறியா? ரசிகர்களை அந்தரத்தில் ஏற்றிய போலீஸ்; தனியார் இடத்தில் இருந்த கட்அவுட் அகற்றம்! |
குறிப்பாக வட மாநிலங்களில் இது போன்ற டிஜிட்டல் அரஸ்ட் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. சென்னை போன்ற நகர பகுதிகளிலும் இச்சம்பவம் நடைபெற்று வரும் சூழலில், திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் அரசு அதிகாரி டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டு பணத்தை இழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

